பொது சுகாதார துறை இயக்குனர் செல்வ விநாயகம், ‘கடந்த சில நாட்களாக பொதுமக்கள், ‘ரெம்டெசிவிர்’ மருந்தைத் தேடி அலைகின்றனர். அந்த மருந்து உயிர் காக்கும் மருந்து கிடையாது என, உலக சுகாதார நிறுவனம், தமிழக அரசு தெளிவாக கூறியுள்ளது. சில நேரங்களில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறக்கூடிய நாட்களை வேண்டுமானால், அந்த மருந்துகள் குறைக்கலாம். இந்த ஊசி மருந்தை போட்டால் கொரோனாவில் இருந்து வெளியில் வரலாம் என்ற சூழல் கிடையாது. அதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு சிலருக்கு, இந்த மருந்து தேவைப்படலாம். அரசு மருத்துவமனைகளில் தேவையான அளவு இருப்பு உள்ளது. யாருக்கு தேவையோ, அவர்களுக்கு மருத்துவர்கள் கொடுத்து விடுவார்கள். இந்த மருந்து ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் கையிருப்பு உள்ளது. இல்லாத மருத்துவமனைகளின் நிர்வாகத்திற்கு அரசின் கோரிக்கை இது தான். ஒரு மருத்துவமனை நடத்துகிற உங்களால் மருந்து வாங்கி கொடுக்க முடியவில்லை என்ற நிலையில், சாமானிய மனிதர்களிடம், மருந்து சீட்டை கொடுத்து மருந்து வாங்கி வாருங்கள் என சொல்வது சரியான முன்னுதாரணமாக இருக்காது. உங்களால் வாங்க முடியாதபோது, அவர்கள் எங்கே போய் வாங்குவர். இதனால், தேவையில்லாத பதற்றம் ஏற்படுகிறது. தற்போது, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், தேவைப்படும் நோயாளிகளுக்கு, ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்கப்படுகிறது. இந்த மருந்து விற்பனை மையங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ரெம்டெசிவிர் மருந்தை தேவையின்றி பயன்படுத்த வேண்டாம். மருந்தை பதுக்கினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.