பேருக்கு அலையும் தலைவர்கள்

டிசம்பர் 25 அன்று, பிரதமர் நரேந்திர மோடி, ஜனவரி 3, 2022 முதல் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும். 60 வயதுக்கு மேற்பட்டோர், இணை நோயுள்ளவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையை பெற்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு ஜனவரி 3 முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும். உலகின் முதல் மரபணு தடுப்பூசியும் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது என்று அறிவித்தார். அறிவிப்பு வெளியானவுடன், இதற்கு தாங்கள்தான் காரணம் என பல எதிர்கட்சித் தலைவர்கள், அதற்கான பேரையும் பெருமையையும் வாங்க போட்டிப்போட்டனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பழைய பதிவுகளை மீள்பதிவு செய்தார். கேரள, மேற்கு வங்க காங்கிரசார் ‘தேசத்திற்கு வழிகாட்டும் ராகுல்’ என வாய்கூசாமல் பொய் சொன்னார்கள். சிவசேனா தலைவர் ஆதித்யா தாக்கரே, ‘எனது இரண்டு முக்கியமான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன்’ என கூறியுள்ளார். திருணமூல் காங்கிரஸின் எம்.பி.யான மஹுவா மொய்த்ராவும் ‘அல்லேலூஜா! மோடிஜி நான் சொன்னதைக் கேட்டிருக்கிறார்’ என டுவீட் செய்துள்ளார். இதேபோல, டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்ட பல தலைவர்கள் வரிசைகட்டி வந்தனர். ஆனால், கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டபோது இவர்கள் அனைவரும், அதுகுறித்த தேவையற்ற சந்தேகங்களை மக்கள் மனத்தில் விதைத்தவர்கள் என்பதை மக்கள் மறந்துவிடவில்லை.