உத்தரப் பிரதேசத்தின் கஜ்ரவுலாவில், வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்தில் “புதிய இளம் வாக்காளர்களுடன் ஒரு கலந்துரையாடல்” என்றநிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த எட்டரை ஆண்டுகளில் இளைஞர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கான பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. மத்திய அரசு மேற்கொண்டுள்ள தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய சீர்திருத்த நடவடிக்கைகள், இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ‘பாரத இளைஞர்களை ஒட்டுமொத்த உலகமும் நம்பிக்கையுடன் பார்க்கிறது. ஏனென்றால் நீங்கள்தான் தேசத்தின் வளர்ச்சிக்காக உந்துசக்தி என்பதுடன் உலகத்திற்கான வளர்ச்சி இயந்திரமாகவும் உள்ளீர்கள் என பிரதமர் மோடி பட்டமளிப்பு விழா ஒன்றில் பேசியிருந்தார். புதிய பாரதம், எதிர்காலத்தை மையமாகக் கொண்டது. அது இளைஞர்களின் தோள்களில் உள்ளது.
கடந்த காலங்களில் நாட்டில் நிலையற்ற மற்றும் கூட்டணி அரசுகள் பதவி வகித்தன. இதுபோன்ற நிலையற்ற தன்மை மக்கள் மத்தியில், குழப்பத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உலக அரங்கில் நாட்டின் வளர்ச்சியைப் பாதிப்பதாக அமைந்தது. ஆனால், 2014ம் ஆண்டு மக்கள் நிலையான அரசை தேர்வு செய்தனர். இது கொள்கைகளில் நிலைத்தன்மையையும் மாற்றத்திற்கான வலுவான அடித்தளத்தையும் ஏற்படுத்தியது. 2014ல் நாட்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 350 ஆக இருந்தது என்றும் தற்போது அது 80 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய மத்திய அரசு, இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதையும், புதிய தொழில்பயிற்சி நிலையங்களை ஏற்படுத்துவதையும் உயர் முன்னுரிமையாகக் கொண்டு செயல்படுகிறது. நாட்டின் வெற்றியில் தொழிற்பயிற்சி நிலையங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. 1950 முதல் 2014 வரை மொத்தம் 10,000 தொழிற்பயிற்சி நிறுவனங்கள் திறக்கப்பட்டிருந்தன. கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் புதிதாக 5,000 தொழிற்பயிற்சி நிலையங்கள் நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், கடந்த 8 ஆண்டுகளில் புதிதாக 4 லட்சம் இடங்கள் ஐ.டி.ஐகளில் உருவாக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், முப்பரிமாண அச்சிடுதல், டுரோன் தொழில்நுட்பம், தொலைமருத்துவம் உள்ளிட்ட புதிய படிப்புகள் ஐ.டி.ஐகளில் கற்பிக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது” என கூறினார்.