1919, ஆகஸ்ட் 12 அன்று அகமதாபாத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் அம்பாலால் சாராபாய், சரளா தேவி. சுதந்திரப் போராட்டத்தில் சாராபாய் குடும்பம் ஈடுபட்டிருந்ததால் காந்தி, தாகூர், சரோஜினி நாயுடு, சி.வி. ராமன் போன்ற தலைவர்கள் இவரது வீட்டிற்கு வந்து செல்வர். எனவே, அவர்களின் தாக்கம் இவரிடம் இருந்தது. உயர் படிப்புக்காக லண்டன் சென்றவர், இரண்டாம் உலகப் போரால் பாரதம் திரும்பினார்.
பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் சர் சி.வி. ராமனிடம் ஆராய்ச்சியாளராகச் சேர்ந்தார். வானியலில் ஆர்வம் காரணமாக காஸ்மிக் கதிர்களை ஆராய்வதற்காக நாடு முழுவதும் கண்காணிப்பு மையங்களை அமைத்தார்.
இசை, நடனம், ஒளிப்படம் போன்ற கலைகளின் மீதும் ஆர்வம் கொண்டவராக இருந்தார். 1957ல் சோவியத் யூனியன் ஸ்புட்னிக் 1 செயற்கைக்கோளை முதல் முறையாக பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பியது. செயற்கைக்கோள்கள் மூலம் தகவல் தொடர்பு, வானிலை முன்னறிவிப்பு, இயற்கை வள ஆராய்ச்சி போன்றவற்றில் சமூக, பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதை உணர்ந்தார்.
பாரதத்தின் ராக்கெட் தொழில்நுட்பத்துக்கு விக்ரம் சாராபாய் தலைமை வகித்தார். நமது முதல் செயற்கைக்கோள் ஆரியபட்டா விண்ணில் செலுத்தப்பட காரணமாக இருந்தார். செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்பின் வளர்ச்சியில் முன்னோடியாகத் இருந்தார். இதன் மூலம் 24 ஆயிரம் கிராமங்களில் 50 லட்சம் பேருக்குக் கல்வியை எடுத்துச் செல்ல உதவினார். நாடு முழுவதும் சமூக அறிவியல் மையங்களைத் தோற்றுவித்தார்.
இந்திய அணுக்கரு இயலின் தந்தை ஹோமி ஜஹாங்கிர் பாபா மறைந்த பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவராக இருந்து, அதை மேலும் விரிவுபடுத்தினார்.
பாரதம் மருத்துவத் துறையில் மிக உயர்ந்த தரத்தைக் கடைபிடிக்க வேண்டும். இங்கேயே மருத்துவத் துறை மருந்துகளையும் மருத்துவக் கருவிகளையும் சுயமாகத் தயாரிக்க வேண்டும் என உழைத்தார். நமது தேசத்தினர் உயர்கல்வி பெறுவதற்காக அகமதாபாத்தில் இந்திய மேலாண்மைக் கழகத்தை (ஐ.ஐ.எம்) உருவாக்கினார். நாடு முழுவதும் சமூக அறிவியல் மையங்களைத் தோற்றுவித்தார். இளைஞர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார். தனிப்பட்ட மனிதர்களின் கண்ணியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.