நீலகிரி மாவட்டம் குன்னூரை தலைமையிடமாக கொண்டு ‘டான்டீ’ எனும் தமிழக தேயிலை தோட்ட நிறுவனம் செயல்பட்டு வருகிறது. டான் டீ நிறுவனம், தொடர் நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் அரசுக்கு இதனால் ரூ. 211 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த அக்டோபரில் இருந்து கடும் நிதி நெருக்கடியில் ’டான்டீ’ இயங்கி வருவதாகவும் கூறியிருந்த தமிழக அரசு, அந்நிறுவனத்தின் 5,318 ஏக்கர் நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க அரசாணை வெளியிட்டு இருந்தது. இதனால் அங்கு பணியாற்றிவந்த 3,800 தொழிலாளர்களின் வாழ்வாதரம் கேள்விக்குறியானது. மேலும், அந்த பணியாளர்களை வெளியேற்றும் முயற்சியிலும் தி.மு.க அரசு ஈடுபட்டது. இதற்கு தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு தனது முழு அதரவை தெரிவித்த தமிழக பா.ஜ.க, கடந்த நவம்பர் 20ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியது. அதில் பேசிய அண்ணாமலை, மாநில அரசால் ‘டான்டீ’ நிறுவனத்தை நடத்த முடியவில்லை என்றால், மத்திய அரசிடம் ஒப்படைத்து விடுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறியிருந்தார். பா.ஜ.கவின் இந்த போராட்டம், நீலகிரியில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில், தமிழக அரசு ’டான்டீ’ நிறுவனத்தின் நிலங்களை வனத்துறையிடம் ஒப்படைக்கும் முடிவை தற்போது நிறுத்தி வைத்துள்ளது. இது தமிழக பா.ஜ.கவின் போராட்டத்துக்கு கிடைத்த பெரிய வெற்றியாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.