அழகு சாதன பொருட்களை டிஜிட்டல் முறையில் விற்பனை செய்வதில் புதுமையை புகுத்தி வெற்றிகரமான நிறுவனத்தை உருவாக்கிய நைக்காவின் நிறுவனர் ஃபல்குனி நயாருக்கு ‘ஈ ஒய் தொழில் முனைவோர் விருது 2021’ வழங்கப்பட்டது. இதனை அவருக்கு வழங்கி உரையாற்றிய மத்திய அமைச்சர் புபேந்தர் யாதவ், ‘பாரதத்தின் துடிப்புமிக்க ஸ்டார்ட் அப் சூழலியல் நாட்டின் தொழில் முனைவு திறனுக்கு சான்றாக உள்ளது. பாரதத்தின் மக்கள்தொகை மற்றும் ஸ்டார்ட் அப்களை மேம்படுத்துவதற்கான அரசின் முன்முயற்சிகள் ஆகியவற்றை பயன்படுத்திக்கொண்டு உலக அளவில் இத்துறையில் பாரதத்தை மூன்றாவது இடத்திற்கு இளைஞர்கள் கொண்டு சென்றுள்ளனர். நமது நாட்டில் 94 யுனிகார்ன் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றின் மொத்த மதிப்பு சுமார் 320 பில்லியன் அமெரிக்க டாலர்கள். கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஏற்பட்ட மாற்றங்கள், சவால்களுக்கு இடையிலும் நமது தொழில் முனைவோர்கள் தொடர்ந்து உறுதியை வெளிப்படுத்தி வெற்றியைக் கண்டுள்ளனர். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக ரூ. 6 ஆயிரம் கோடி மதிப்பிலான ராம்ப் எனும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் பெண் தொழில் முனைவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பது திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று’ என கூறினார்.