விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அகில உலகபொதுச் செயலாளர் மிலிந்த் பராண்டே நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், ‘கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய அபிரகாமிய மதங்களின் கைகளில் மதமாற்றம் ஒரு தீய கருவியாக மாறிவிட்டது, அவர்கள் கட்டாயம், மிரட்டல், பணத்தைப் பயன்படுத்தி மக்களை ஹிந்து மதத்திலிருந்து, தங்கள் மதத்திற்கு மாற்றுகிறார்கள். இத்தகைய மதமாற்றங்கள் பாரதத்தில் உள்ள பல குடும்பங்களை சிதைத்துள்ளன. அமைதியான ஹிந்த சமூகத்தில் குழப்பத்தையும், வேற்றுமையும் உண்டாக்குகிறது. இதற்கு ஒரு உதாரணம் இப்பொழுது நடந்த நமது சகோதரி லாவண்யாவின் மரணம். இந்நிகழ்வு, மதமாற்றம் என்னும் பெருங்கடலில் ஒரு சிறு துளிதான்.
இவ்வாறாக நடக்கும் மதமாற்றங்கள் தேசத்தின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் சீர்குலைக்கிறது. தேச வெறுப்பை உருவாக்குகிறது. மதமாற்றம் ஹிந்துக்களுக்கு எதிராகவும், பாரத தேசத்திற்கு எதிராகவும், வெளிநாட்டு சக்திகளின் பண உதவியுடன் நடைபெறுகிறது. இது இந்த தேசத்தை மதத்தால் துண்டாட நினைக்கிறது. இத்தகைய மத மாற்றங்களை தடுக்க ஒரு மதமாற்றத் தடை சட்டம் தேவை. மதமாற்ற சட்டத்தினால் மட்டுமே நமது தேசத்தையும், கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும், மக்களையும் காக்க முடியும். பல இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் அவர்களின் மதமாற்ற முயற்சிகளுக்காக பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுகின்றன.
விஷ்வ ஹிந்து பரிஷத் வடதமிழகம், தமிழக அரசை ஒரு பலமான மதமாற்ற தடை சட்டத்தை இயற்ற வேண்டுகோள் விடுக்கிறது. தான் ஒரு மதசார்பில்லாத அரசு என்று கூறிக் கொள்ளும் தமிழக அரசின் கோட்பாட்டிற்கு மதமாற்ற தடை சட்டம் உறுதுணையாக இருக்கும். ஹிந்து சமய தொண்டு அறக்கட்டளைகள் சட்டத்தின்படி, அரசு கோயில்களின் உரிமையாளர்களாக செயல்படக்கூடாது, அரசு ஒரு தணிக்கையாளராக மட்டுமே இருக்க வேண்டும். தினசரி வழிபாட்டு முறைகளில் தலையிடக்கூடாது, கோயில்களின் அறங்காவலர்களும் நிர்வாகிகளும் ஹிந்து மதத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது.
தமிழக அரசு கோயில்களின் சொத்துக்களை ஹிந்து சமயம் சார்ந்த பயன்பாட்டிற்கு மட்டும் செலவு செய்ய வேண்டும். அரசு கோவில்களில் இருந்து வெளியேற வேண்டும் என்று வி.ஹெச்.பி கேட்டுக் கொள்கிறது. தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள பல்லாயிரக்கணக்கான கோயில்கள் இன்றும் கேட்பாரற்று சீர்குலைந்துள்ளன. கோயில்களின் வருமானம் இது போன்ற சிதிலமடைந்த கோயில்களின் மேம்பாட்டிற்காக செலவு செய்யப்பட வேண்டும்.
தமிழகத்தில் ஹிந்து கோவில்கள் இடிக்கப்படுவதை விஷ்வ ஹிந்து பரிஷத் கண்டிக்கிறது. சமீப காலமாக தமிழகத்தில் பல ஹிந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் சட்டப் பாதுகாப்பு கோரிய பிறகும், இக்கோயில்கள் இடிக்கப்படுகின்றன. இதில் 100 ஆண்டுகளுக்கும் மேலான கோயில்களும் அடங்கும். தமிழக அரசு இதுபோன்ற ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் செயல்களை உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும், புறம்போக்கு நிலத்திலும், அரசு அனுமதி இல்லாமல் செயல்படும் மசூதிகளையும் சர்ச்சுகளையும் அகற்ற அரசு வேண்டும்.
அகில பாரத ஹிந்து துறவிகள் மற்றும் யோகிகள் மாநாடு, மதுரையில் 2022 ஜூன் 4, 5 தேதிகளில் நடைபெறும். காஞ்சிபுரத்தில் அகில பாரத விஷ்வ ஹிந்து பரிஷத் மாநாடு ஜூன் 23 முதல் 26 வரை நடைபெறவுள்ளது’ என தெரிவித்தார்.