கோவை போத்தனுாரில் பா.ஜ.க சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் பிரசாரம் செய்தார். அப்போது அவர், ‘நான் அனைத்து மதங்களையும் மதிப்பவன். பா.ஜ.க’வின் தேசிய பொறுப்பில் இருக்கிறேன். சிறுபான்மையின மக்கள் என்னை அன்போடுதான் வரவேற்கின்றனர். ஆனால் தி.மு.க அரசு, காவல்துறை மூலம் என்னை பிரசாரம் செய்யவிடாமல் தடுத்து கைது செய்கிறது. நான் மதத்தின் பெயரால் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை தான் விமர்சனம் செய்கிறேன். பா.ஜ.கவை முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிரான கட்சியாக சித்தரிப்பதுதான் தி.மு.க.,வின் நோக்கம். பாரதத்தில் அனைத்து மதத்தினரும் ஒன்றாக சேர்ந்து வாழக்கூடாது என, சில சக்திகள் திட்டமிடுகின்றன. அதனால் தான் தி.மு.க என்னை கைது செய்வதில் முனைப்பு காட்டுகிறது’ என பேசினார். இந்தத் தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசிக்கொண்டு இருக்கும்போதே காவல்துறை மீண்டும் அவரை கைது செய்தது. வேனில் அவரை அழைத்து செல்லும்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவரை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.