‘வந்தே பாரதம் நிருத்ய உத்சவ்’ என்பது, டெல்லியில் 2022ம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க, நாடு முழுவதும் உள்ள சிறந்த நடனத் திறமையாளர்களைத் தேர்ந்தெடுக்கும் ஒரு முயற்சி. பாரதத்தின் 75 வது சுதந்திர வருட கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் ஒரு தனித்துவமான முதல் முயற்சி இது. மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளுக்குப் பிறகு, தேர்வுகள் இப்போது மண்டல அளவை எட்டியுள்ளன. முதல் மண்டல அளவிலான போட்டி டிசம்பர் 9ல் கொல்கத்தாவில் உள்ள சயின்ஸ் சிட்டியில் நடைபெற்றது. மேற்கு வங்கம், அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட கிழக்கு மண்டலத்தின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 170 நடனக் கலைஞர்கள் 17 குழுக்களாக இதில் பங்கேற்றனர். இதேபோல மண்டல அளவிலான நிகழ்வுகள் மும்பை, பெங்களூரு, டெல்லியிலும் நடைபெறுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அணிகள் டெல்லியில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். ஜனவரி 26, 2022 அன்று டெல்லி ராஜ்பாத்தில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் வெற்றி பெற்ற சிறந்த 480 நடனக் கலைஞர்கள் நடனமாடுவார்கள்.