மறைந்த தி.மு.க தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு, மக்கள் வரிப்பணம் 81 கோடியை கடலில் கொட்டி எழுதாத ஒரு பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக கருத்துக்கேட்புக் கூட்டத்தை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்தியது. இதில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிராக பல்வேறு கட்சியினர், பொதுமக்கள், அமைப்புகள் தரப்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. நினைவுச் சின்னம் அமைப்பதற்கு தி.மு.கவினர், அவர்களது கூட்டணி கட்சியினர் உள்ளிட்டவர்கள் ஆதரவு தெரிவித்தனர். கஜானாவில் பணம் இல்லை, என கூறிக்கொண்டு, மக்கள் வரிப்பணம் ரூ. 81 கோடியை கடலில் கொட்டி, 8551.13 சதுரமீட்டர் கடல் பரப்பை ஆக்கிரமித்து, 13 மீனவ கிராமங்களின் வாழ்வாதாரத்தை அழித்து எழுதாத ஒரு பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு பா.ஜ.க, சட்டப் பஞ்சாயத்து இயக்கம், தேசிய பாரம்பரிய மீனவ கூட்டமைப்பு, சீமானின் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும், வழக்கம்போல இந்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்திலும் தி.மு.க அரசிற்கு ஆதரவான கருத்துகளை மட்டுமே ஏற்பது, எதிர் கருத்துத் தெரிவித்தால், அதனை எதிர்த்து கூச்சலிடுவது அநாகரீகமாக நடந்துகொள்வது போன்ற செயல்கள் தான் கடைசி வரை காணப்பட்டது.