உலகளவில் உயர்கல்வி குறித்து, லண்டன் நாட்டைச் சேர்ந்த க்யூ.எஸ் (குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்) என்ற அமைப்பு ஆய்வு செய்து தர வரிசைப்பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், 2023ம் ஆண்டுக்கான 1,500 உயர்க்கல்வி நிறுவனங்கள் தர வரிசைப்பட்டியலை நேற்று வெளியிட்டது. ஆசியா, ஐரோப்பியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் செயல்படும் உயர்கல்வி நிறுவனங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதில், பாரதத்தைச் சேர்ந்த 41 உயர்க்கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. கடந்தாண்டு தரவரிசையில், 35 உயர்கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்த நிலையில், சென்னை பல்கலைக்கழகம், சண்டிகர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 6 கல்வி நிறுவனங்கள் இவ்வாண்டு புதிதாக இடம்பெற்றுள்ளன. இந்த தர வரிசைப்பட்டியல் முதல் 200 இடங்களில் மூன்று இந்திய பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன. இதில், பெங்களூர் ஐ.ஐ.எஸ்.சி 155வது இடத்தையும், மும்பை ஐ.ஐடி 172வது இடத்தையும், டெல்லி ஐ.ஐ.டி 174 வது இடத்தையும் பிடித்துள்ளன. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஒட்டுமொத்த பிரிவிலும் பொறியியலிலும் முதலிடம் பிடித்து வரும் சென்னை ஐ.ஐ.டி இந்த பட்டியலில் 250வது இடத்தைப் பிடித்துள்ளது. நற்பெயர், பல்கலைக்கழக நிர்வாகத்தின் அணுகுமுறை, ஆசிரியர் மாணவர் விகிதம், ஆராய்ச்சி கட்டுரைகள், பன்னாட்டு ஆசிரியர்கள் விகிதம், பன்னாட்டு மாணவர்கள் விகிதம், பன்னாட்டு ஆராய்ச்சி தொடர்பு, வேலைவாய்ப்பு மேம்பாடு உள்ளிட்ட எட்டு அளவீடுகளை கணக்கில் கொண்டு இந்த தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதில், ஆராய்ச்சி கட்டுரைகள் பிரிவில் பெங்களூர் ஐ.ஐ.எஸ்.சி 100க்கு 100க்கு மதிப்பெண்களை பெற்றுள்ளது. சென்னை பல்கலைக்கழகம் 541 முதல் 550 என்ற வரம்பிலும், அண்ணா பல்கலைக்கழகம் 551 முதல் 560 என்ற வரம்பிலும், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் 801 முதல் 1000 என்ற வரம்பிலும் இடம்பெற்றுள்ளன. அண்ணா பல்கலைக்கழகம் 85.2 மதிப்பெண் பெற்றுள்ளது. முதல் ஐந்நூறு இடங்களில் ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்கள், மாநில அரசின் உயர்கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் பின்தங்கியுள்ளன. முன்னதாக, உலகின் தலைசிறந்த 500 கல்வி நிறுவனங்களுக்குள், இந்திய உயர்கல்வி நிறுவனங்களை கொண்டு வருவதற்காக புகழ்பெற்ற நிறுவனங்கள் என்ற திட்டத்தை கடந்த 2019ல் மத்திய அரசு அறிவித்தது. இதில், 10 பொதுதுறை, 10 தனியார் கல்வி நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த கல்வி நிறுவனங்களின் தரத்தை உயர்த்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.