உதயநிதிக்கு எதிராக தி.மு.க., – தர்மபுரி எம்.பி., போர்க்கொடி

தர்மபுரியில், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,யாக இருந்த சேகர், 2006ல் தி.மு.க.,வில் இணைந்தார். அ.தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன், மீண்டும் அ.தி.மு.க.,விற்கு சென்றார். பத்தாண்டுகளுக்கு பின், மீண்டும் தி.மு.க.,வில் இணைந்தார். அவர் தற்போது, தர்மபுரி தி.மு.க., கிழக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார். சேகரின் மகன் வெங்கடேசனை, தர்மபுரி கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக, உதயநிதி அறிவித்துள்ளார் அதுபோல, தர்மபுரி மேற்கு மாவட்டத்தில் தி.மு.க., முன்னோடியான மகேஷ்குமாரை துணை அமைப்பாளராகவும், மண் கடத்தல் புகாருக்கு உள்ளான சிவகுருவை, மாவட்ட அமைப்பாளராகவும் நியமித்துள்ளார்.

இது குறித்து, தர்மபுரி தி.மு.க., – எம்.பி., செந்தில்குமார், ‘தர்மபுரி மாவட்டத்திற்கு அறிவித்துள்ள இரு அமைப்பாளர்களை விட, தகுதி வாய்ந்த நபர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. ‘இதுபோல் நடந்து விடக்கூடாது என, பல கடிதங்கள் அளித்தும், பலன் அளிக்கவில்லை’ என , சமூகவலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது: இளைஞரணி மாநில நிர்வாகிகள் நியமனத்தின் போது, கட்சிக்காக தொடர்ந்து உழைத்தவர்களுக்கும், சமூக ரீதியாகவும் உதயநிதி பதவிகளை வழங்கினார். அதுபோல, தர்மபுரி கிழக்கு, மேற்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளும் தேர்வு செய்யப்படுவர் என, நினைத்திருந்தேன். கட்சிக்கு உழைப்பவர்களுக்கு இளைஞரணி நிர்வாகிகள் பதவி வழங்க, உதயநிதிக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினேன். நேற்று முன்தினம் என் பரிந்துரை புறக்கணிக்கப்பட்டு, இளைஞரணி நிர்வாகிகள் நியமன அறிவிப்பு வெளியானது. என் வருத்தத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

உதயநிதிக்கு எதிராக எம்.பி., பகிரங்கமாக கருத்து தெரிவித்தது, தர்மபுரி மாவட்ட தி.மு.க.,வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.