நேதாஜிக்கு புகழஞ்சலி

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பல தலைவர்களும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸிற்கு மரியாதை செலுத்தினர். பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில், “பராக்ரம தினமான இன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு மரியாதை செலுத்துவதோடு பாரத வரலாற்றில் அவர் அளித்த ஈடு இணையற்ற பங்களிப்பை நினைவுகூர்கிறேன். காலனித்துவ ஆட்சிக்கு எதிராக அவர் காட்டிய தீவிர எதிர்ப்பினால் அனைவராலும் என்றும் நினைவில் கொள்ளப்படுவார். அவரது சிந்தனைகளால் வெகுவாக ஈர்க்கப்பட்டு, பாரதம் குறித்த அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற நாம் பணியாற்றுகிறோம்” என்று தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “தன்னுடைய தனித்துவமான தலைமைப் பண்புகளால் மக்களை ஒன்றிணைத்து, பாரத சுதந்திரத்திற்காக ‘ஆஸாத் ஹிந்த் ஃபவுஜ்’ என்ற அமைப்பை உருவாக்கினார். அவரது 126வது பிறந்த நாளில் தேசம் நேதாஜியை நினைவுகூர்ந்து அவரது தைரியத்திற்கும், போராட்டத்திற்கும் தலைவணங்குகிறது. அனைவருக்கும் எனது பராக்கிரம தின வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த நேதாஜியின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரும் நேதாஜிக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.