செம்மொழி தமிழாய்வு நிறுவனம், பெங்களூரு தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து, பல்வேறு சங்க இலக்கியங்களை ரா.சீனிவாசன், தா.கிருஷ்ணமூர்த்தி, கே.மலர்விழி உள்ளிட்ட பல பேராசிரியர்கள் உதவியுடன் கன்னட மொழியில் மொழி பெயர்த்தது. தமிழின் முக்கிய இலக்கண நுாலான தொல்காப்பியத்தை எச். பாலசுப்பிரமணியன், கி.நாச்சிமுத்து ஆகிய பேராசிரியர்கள் ஹிந்தியில் மொழிபெயர்த்தனர். டெல்லியில் நடந்த விழாவில், மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் இவற்றை வெளியிட்டார். செம்மொழி தமிழாய்வு நிறுவனம், தமிழ் இலக்கியங்கள், ஆய்வு நுால்களை மத்திய அரசின் நிதியுதவியுடன், பல மொழிகளில் அச்சிட்டு வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே புறநானுாறு, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நுால்களை கடந்த ஆண்டு வெளியிட்டது நினைவுகூரத்தக்கது.