மதுரை பழங்காநத்தத்தில் மதுரை மாநகர பா.ஜ.க சார்பில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அப்போது பேசிய அண்ணாமலை, “சினிமா மாடல் போல நடிப்பதே, திராவிட மாடல். முதல்வர் எதற்கெடுத்தாலும் நடித்து வருகிறார். காவல்நிலையத்தில் தீடீர் ஆய்வின்போது எப்படி ஆளுங்கட்சி கேமரா மட்டும் செல்கிறது? வரும் காலம் பா.ஜ.கவின் காலம். 400 எம்.பிக்களை பெற்று மீண்டும் பிரதமராக மோடி வருவார். தமிழகத்தில் இருந்து 25 பா.ஜ.க எம்பிக்கள் வெற்றி பெற்று செல்வார்கள். தமிழகத்தில் புதிதாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை என்ற சொல் தொடர்ந்து கேட்கிறது. தி.மு.க ஆட்சியில் குற்றவாளிகள் தைரியமாக குற்றங்களில் ஈடுபடுகின்றனர். தி.மு.கவினர் கட்ட பஞ்சாயத்தும் அதிகரித்துள்ளது. தி.மு.க அமைச்சர்கள் ஊழலில் ஈடுபடுகின்றனர். தி.மு.கவினரின் ஊழல்கள் பற்றி பேசியதற்காக என் மீது ரூ. 625 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர். எத்தனை வழக்கு போட்டாலும் பேசுவேன், தட்டிக்கேட்பேன். சேகர்பாபு என்றைக்கு ஆதீனத்தை தவறாக பேச ஆரம்பித்தாரோ அன்றைக்கு கதை காலியாக போகிறது என்பது அர்த்தமாகிவிட்டது. ஆர்எஸ்.பாரதி, என் ஜாதக கட்டம் குறித்தெல்லாம் பேசுகிறார். கடவுள் நம்பிக்கையற்ற தி.மு.க அமைச்சர்களுக்கு கடவுள் மீது, ஜாதகம் மீது என்ன தீடீர் அக்கறை? கோயில் பணம் மீது தி.மு.கவுக்கு கண். நீங்கள் ஆதீனத்தை மட்டும் தொட்டுப்பாருங்கள். பிறகு, மதுரை மக்கள் என்ன செய்யப் போகிறார்கள், பா.ஜ.க என்ன செய்யப்போகிறது, பிரதமர் மோடி என்ன செய்யப்போகிறார் என்பதை பாருங்கள். ஆதீனம், சன்னியாசி, முனிவர்களை பற்றி தி.மு.க அரசு தவறாக பேசி வருகிறது” என உரையற்றினார்.