பா.ஜ.கவை விட்டு வெளியேற மிரட்டல்

முத்தலாக் போராட்டவாதியான உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த நிதா கான், பா.ஜ.கவில் இணைந்து அதன் சிறுபான்மை பிரிவில் பொறுப்பு வகிக்கிறார். உ.பி சட்டசபை தேர்தலில் பா.ஜ.கவுக்காக தீவிர பிரச்சாரம் செய்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முஸ்லிம் மதகுருவும் தீவிர மதவாதியுமான தௌகீர் ரசா கானின் சகோதரரின் மருமகள் நிதா கான். 2018ல், நிதா கானுக்கு அவரது கணவர் ஷீரன் அளித்த முத்தலாக்கையடுத்து நீதிமன்றத்தை நாடினார். முத்தலாக செல்லாது என்று பரேலி நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து, பரேலியைச் சேர்ந்த ஆல் இந்தியா ஃபைசான் இ மதீனா கவுன்சில் குழு, நிதா கானுக்கு பத்வா (தடை) விதித்தது. மதகுருமார்கள் நிதா கானின் தலைமுடியை வெட்டுபவர்களுக்கு ரொக்கப் பரிசாக ரூ. 11,876 தரப்படும், 3 நாட்களுக்குள் அவர் நாட்டை விட்டு வெளியேறாவிட்டால் கற்களால் தாக்கிக் கொல்லப்படுவார் என அந்த பத்வாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சமீபத்தில் தன் உறவினர் திருமணத்திற்கு சென்றிருந்த நிதா கானை, அவரது முன்னாள் கணவர், குடும்பத்தினர், உறவினர்கள் சூழ்ந்துகொண்டனர். பரேலி பகுதியை சேர்ந்த எந்த முஸ்லிமும் பா.ஜ.கவை ஆதரிக்கவில்லை. நீ உடனடியாக பா.ஜ.அகவை விட்டு வெளியேற வேண்டும். அது ஒரு முஸ்லீம்கள் இல்லாத கட்சி என கூறி அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அவருக்கு காயங்கள் ஏற்பட்டது. இதுகுறித்து காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் அவரின் கணவர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.