விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தடை விதித்த தமிழக அரசை கண்டித்தும், அரசுக்கு நல்ல புத்தியை இறைவன் வழங்க வேண்டும் என்றும் வேண்டி, காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள சங்குபாணி விநாயகர் கோயில் வாசலில் விநாயகர் துதி பாடி, இந்து முன்னணியினர் அறவழிபோராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கோயில் வாசலில் தேங்காய், பழக் கடை வைத்திருக்கும் கடையின் உரிமையாளர் பூபதி, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அத்திவரதர் புகைப்படத்தில் செருப்பை சொருகி வைத்திருந்தார். இது குறித்து இந்து முன்னணியினர் பூபதியிடம் கேட்டபோது, “நான் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவன். இது தி.மு.க ஆட்சிடா, அப்படித்தான் செய்வேன்” என திமிராகக் கூறியுள்ளார். இதனால் அங்கு சர்ச்சை வெடித்து கைகலப்பு ஏற்பட்டது. அப்போது பூபதி பூ அறுக்கும் கத்தியால் இந்து முன்னணி பிரமுகர் சதிஷ் என்பவரின் கையை கிழித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பூபதியை காவல்நிலையம் அழைத்து சென்றனர். இந்து முன்னணியினர் சிவகாஞ்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையெடுத்து பூபதியை கைது செய்த காவல்துறையினர், மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.