திமு.க பொருளாளர் டி.ஆர்.பாலு எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் , “தங்க நாற்கர சாலையை அமைத்துத் தந்தவர் டி.ஆர்.பாலு. சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றவிடாமல் தமிழகத்தின் வளர்ச்சியை அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் தடுத்தது” என கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “வாஜ்பாயின் கனவு திட்டம்: “உலகத்துக்கே தெரியும் தங்க நாற்கரச் சாலை திட்டம் என்பது முன்னாள் பிரதமர் மறைந்த வாஜ்பாயின் கனவு திட்டம். அதேநேரம் 2000வது ஆண்டு முதல் 2004 வரையிலான காலகட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த பி.சி.கந்தூரி தமிழகத்தில் நாற்கர நெடுஞ்சாலைத் திட்டத்தை தொடங்கி வைத்தவர். 2013ல் இந்தத் திட்டம் முழுமையாக நிறைவேறியது. ஆனால் தொடக்கத்திலும் முடிவிலும் இல்லாமல் இடையில் (2004 முதல் 2009 வரை) அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு, எப்படி இத்திட்டத்தை தன்னுடைய தனிப்பட்ட சாதனையாகக் கூற முடியும்? ஆனால் டி.ஆர்.பாலு செய்த மிகப் பெரிய சாதனை என்பது இந்த தங்க நாற்கரச் சாலை திட்டத்தில் ஒப்பந்ததாரர்களிடம் கணிசமான அளவு கட்டாய வசூல் செய்தது. இது ஒருபுறமிருக்க, சேது சமுத்திர திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ. 900 கோடி செலவாகும். இந்த திட்டத்தை எப்படியாவது செயல்படுத்த முன்னாள் முதல்வர் கருணாநிதி முனைந்தபோது, மணல் அள்ளும் ஒப்பந்தம் எடுப்பதற்கு கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், டி.ஆர் பாலுவுக்கும் இடையே கடும் போட்டி நடைபெற்றது. இவ்வாறு இந்தத் திட்டத்தின் மூலம் தன்னையும், தன் கட்சியையும் வளப்படுத்திக் கொள்ள டி.ஆர்.பாலு முயற்சித்தது உண்மை. பாரத மக்களின் பாரம்பரிய நம்பிக்கையான ராமர் பாலத்தை இடித்து, அங்கே அறிவியல் சாத்தியமில்லாத ஒரு நீர் வழித்தடத்தை உருவாக்கி, மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதற்காக தீட்டப்பட்ட அந்த திட்டம் நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் பாரதத்தின் மானம்தான் கப்பலேறி இருக்கும்” என தெரிவித்துள்ளார்.