திருணமூல் தலைவரின் மகள் கைது

பாரத வங்கதேச எல்லை வழியாக பசு கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட மேற்கு வங்க மாநிலத்தில் திருணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அனுப்ரதா மண்டலின் மகள் சுகன்யா மண்டல், இதே வழக்கில் பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் அமலாக்க இயக்குனரகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தந்தை கைது செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கு பிறகு சுகன்யா மண்டல் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த மாதம் அனுப்ரதா மண்டலின் ஆடிட்டர் மணீஷ் கோத்தாரியை அமலாக்கத்துறை கைது செய்தது நினைவு கூரத்தக்கது. சுகன்யாவிடம் ஏற்கனவே பலமுறை அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. பிர்பூம் மாவட்டத்தில் உள்ள ஆரம்பப் பள்ளி ஆசிரியையான சுகன்யாவின் வங்கிக் கணக்குகள், சந்தேகிக்கத்தக்க மிகப்பெரிய அளியவிலான பண பரிவர்த்தனைகள் மற்றும் வருமானத்திற்கு அப்பாற்பட்ட சொத்துக்கள் ஆகியவற்றைக் காட்டி அவரிடம் விசாரிக்கப்பட்டது. விசாரணையில் இதுபற்றி அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. தனது தந்தை மற்றும் அவரது ஆடிட்டர் மட்டுமே இதனை பற்றி அறிந்திருப்பதாக அவர் கூறி மழுப்பினார். முன்னதாக, பசு கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் அனுப்ரதாவை மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) ஆகஸ்ட் மாதம் கைது செய்தது. பின்னர் அதே வழக்கில் தொடர்புடைய பணமோசடி குற்றத்திற்காக அவர் நவம்பர் 17 அன்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அனுபிரதா மண்டல், அம்மா நில முதல்வர் மமதா பானர்ஜியின் மிகவும் நம்பகமான உதவியாளராக இருந்தவர். அக்கட்சியினரால் பிரபலமாக “கெஸ்டோடா” என்று அழைக்கப்பட்டவர்.