விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அக்கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் ஒருங்கிணைப்பில் மணிவிழாவுக்கான தங்கம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரிலுள்ள சர்.பி.டி. தியாகராய அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருமாவளவன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநிலச் செயலாளர் நற்சோனை, “மாவட்டங்களில் திருமாவளவன் பெயரைச் சொல்லி நன்கொடைகள் வசூலிக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகிகள், பெண்களை மிகவும் கேவலமாக திட்டுகின்றனர். நான் எல்லாவற்றையும் பதிவுசெய்து வைத்திருக்கிறேன். அதையெல்லாம் காட்டுகிறேன். ஆண் சமூகம் இன்னும் திருந்தவில்லை. அவர்கள் திருந்த வேண்டும். நாங்கள் சனாதனத்தை எதிர்க்கின்றோம். ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள்ளேயே மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை சனாதனம் இருக்கிறது என்று பேசினார். இவரது பேச்சை ஆமோதிக்கும் விதமாக அங்கிருந்த பெண்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இதனால், செய்வதறியாது விழித்த திருமாவளவன், தனக்குப் பின்னால் அமர்ந்திருந்த நிர்வாகி ஒருவரை அழைத்து, நற்சோனையை பேச்சை முடித்துக் கொள்ளும்படி கூறுமாறும், இல்லாவிட்டால் மைக்கை அனைத்து விடுமாறும் கூறினார். அந்த நிர்வாகியும் நற்சோனை அருகே சென்று பேச்சை முடித்துக் கொள்ளுமாறு தெரிவித்தார். ஆனால், அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கவே, அந்த நிர்வாகி மைக்கை அணைத்து விட்டார். இதனால், ஆத்திரமடைந்த நற்சோனை, அந்த நிர்வாகியின் கையை தட்டி விட்டு தொடர்ந்து பேசினர். அப்போது, நற்சோனைக்கு ஆதரவாக அரங்கில் அமர்ந்திருந்த மகளிர் அணியினர் எழுந்து நின்று ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.