பிரதமர் நரேந்திர மோடி நேற்று 84வது மனத்தின் குரல் நிகழ்ச்சியில் மோடி பேசினார். அதில், ‘விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேருக்கு அஞ்சலியை செலுத்துகிறேன். கொரோனா நோய் தொற்றுக்கு மத்தியில் பாரதம் ஒரு குடும்பமாக ஒன்றாக நிற்கிறது. பாரதத்தில் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகில் உள்ள தடுப்பூசிகளின் புள்ளிவிவரங்களை நமது நாட்டுடன் ஒப்பிடுகையில் நம்நாடு இதுவரை இல்லாத ஒரு பணியை செய்துள்ளது. 140 கோடி டோஸ் தடுப்பூசிகள் என்ற மைல்கல்லை கடந்துள்ளது. இது ஓவ்வொரு இந்தியனின் சாதனை.
உலகை அச்சுறுத்தும் ஒமைக்ரான் வைரஸ் தற்போது நமது வீட்டு கதவையும் தட்டிவிட்டது. ஒமைக்ரானை எதிர்கொள்ள நாம் தயாராகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். வரும் புத்தாண்டில் ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு நிறுவனமும் வரும் ஆண்டில் சிறப்பாக செயல்பட ஏதாவது சிறப்பாக செய்ய வேண்டும் என்று தீர்மானம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மனத்தின் குரல் நிகழ்ச்சி, அரசின் பணிகளை முன்னிலைப்படுத்துவது அல்ல. அடிமட்ட அளவிலான மாற்றத்தை உருவாக்குபவர்களின் கூட்டு முயற்சிகளை பற்றியது. ஊடகங்களுக்குத் தெரியாமல் பலர் பெரிய நல்ல விஷயங்களை செய்கிறார்கள். நாட்டின் எதிர்காலத்துக்காக, வருங்கால சந்ததியினருக்காக உழைக்கிறார்கள்.
தெலங்கானாவைச் சேர்ந்த 84 வயதான டாக்டர் குரேலா விட்டலாச்சார்யா, கனவினை நனவாக்க வயது ஒரு தடையல்ல என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. தான் சம்பாதித்த செல்வத்தை கொண்டு ஒரு நூலகத்தை அமைத்தார். மக்களும் ஆதரவு அளித்தார்கள். இந்நூலகத்தில் சுமார் இரண்டு லட்சம் புத்தகங்கள் இருக்கின்றன. இதனால் மாணவர்கள் பலனடைந்து வருகின்றனர்.
புனேயில் உள்ள பண்டார்கர் கிழக்கத்திய ஆய்வுக் கழகம், வெளிநாட்டினருக்கு மஹாபாரதத்தின் இணையவழிப் படிப்புக்களைத் தொடங்கி இருக்கிறது. இந்தப் படிப்பு இப்போது தான் தொடங்கப்பட்டிருந்தாலும், இதன் உள்ளடக்கத்தைத் தயார் செய்யும் பணிகள் 100 ஆண்டுகளுக்கு முன்பே செய்யப்பட்டது என்பது உங்களுக்குப் பேராச்சரியத்தை அளிக்கலாம்.
உலகம் முழுவதிலும் பாரதத்தின் கலாச்சாரத்தைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. செர்பிய நாட்டு அறிஞரான டாக்டர். மோமிர் நிகிச். தனது 70வது வயதிலே சமஸ்கிருதம் கற்றார். சமஸ்கிருத செர்பிய இருமொழி அகராதியை உருவாக்கி உள்ளார். மங்கோலியாவைச் சேர்ந்த 93 வயதான பேராசிரியர் ஜே. கேந்தேதரம், 40 ஆண்டுகளாக பாரதத்தின் சுமார் 40 பண்டைய நூல்கள், மஹாகாவியங்களை மங்கோலிய மொழியில் மொழியாக்கம் செய்திருக்கிறார். கோவாவைச் சேர்ந்த சாகர் முலே, பல நூறு ஆண்டுகள் பழைமையான காவீ ஓவியக்கலை, வழக்கொழிந்து போவதிலிருந்து காப்பாற்றுவதில் ஈடுபட்டுள்ளார். ஒரு சிறிய முயற்சிகூட, நமது கலைகளைப் பாதுகாக்க, மிகப்பெரிய பங்களிப்பை அளிக்க முடியும். நாம் இதற்கான உறுதியை எடுத்தால், நமது பண்டைய கலைகளைப் பாதுகாத்து, பராமரித்து, பேணுவது ஒரு மக்கள் இயக்கமாக உருவாகும்.
அருணாச்சல் பிரதேசத்தில் பறவைகள் கொல்லப்படுவது தடுக்க அங்குள்ள மக்கள், வேட்டைத் துப்பாக்கிகளை ஒப்படைக்கும் ‘அருணாச்சல் பிரதேசம் ஏர்கன் சரண்டர் இயக்கத்தை’ செயல்படுத்தி வருகிறார்கள். தேசிய மாணவர் படை வாயிலாகத் தொடங்கப்பட்ட புனீத் சாகர் இயக்கத்தில் 30,000த்திற்கும் மேற்பட்ட என்.சி.சி மாணவர் படையினர் கடற்கரைகளில் தூய்மைப் பணியை மேற்கொண்டார்கள். அங்கிருந்த நெகிழிகளை அகற்றி, அவற்றை மறுசுழற்சிக்காகத் திரட்டினார்கள்.
தூய்மையை நோக்கி ஒரு படி என்ற முயற்சியில் சில சுவாரசியமான விஷயங்கள் நடந்திருக்கின்றன. தூய்மை விஷயங்களில் புதுமையாகச் செயல்பட முடியும் என சில ஆண்டுகள் முன்பு வரை, யாருக்கும் நம்பிக்கை இல்லை ஆனால், இன்று இது அமைப்பின் ஒரு பகுதியாக மாறி வருகிறது. இது தான் தேசத்தின் புதிய கருத்தோட்டம். இதற்கு நாட்டுமக்கள் அனைவரும் இணைந்து தலைமை தாங்குகிறார்கள்.
நாம் கல்வி கற்பதாகட்டும், புதியதாக ஒன்றைத் தெரிந்து கொள்வதாகட்டும், நாம் ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். செல்வத்தைத் திரட்டும் போது, உயர்வு, வளர்ச்சி அடைய வேண்டும் போதும், ஒவ்வொரு கணத்தையும், ஒவ்வொரு ஆதாரத்தையும் நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு வகையில் இது, தற்சார்பு பாரதத்திற்கான ஒரு மந்திரம்.
நாம் நமது ஆதாரங்களை சரியான முறையில் பயன்படுத்தினால், அவற்றை விரயமாக்காதிருந்தால், அப்போது தான் நம்மால் சொந்த பலத்தை அடையாளம் கண்டு கொள்ள இயலும். அப்போது தான் தேசம் தற்சார்பு உடையதாக ஆகும். பெரிய கனவுகளைக் காணுவோம், அவற்றை நிறைவேற்றும் பொருட்டு, முழுவீச்சில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வோம். நமது கனவுகள் நம்வரை மட்டுமே குறுகிப் போய் விடக்கூடாது. நமது கனவுகள் நமது சமூகம் மற்றும் தேசத்தின் முன்னேற்றத்துடன் இணைந்திருக்க வேண்டும், நமது வளர்ச்சியால் தேசத்தின் வளர்ச்சிப் பாதை திறக்க வேண்டும்.