குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள மதாபர் கிராமம், உலகிலேயே மிகவும் வசதி படைத்த கிராமமாகத் திகழ்கிறது. இங்கு மொத்தம் 7,600 வீடுகளும் 17 வங்கிகளும் உள்ளன. இங்குள்ள வங்கிகளில் மக்கள் போட்டுள்ள சேமிப்புத் தொகை ரூ. 5 ஆயிரம் கோடிக்கும் அதிகம். அங்கு தனி நபர் சேமிப்பு ரூ. 15 லட்சமாக உள்ளது. இந்த கிராமத்தில் பள்ளி, கல்லூரி, ஏரி, அணை, மருத்துவ மையம், கோயில், நவீன வசதிகளைக் கொண்ட கோசாலை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. விவசாயம்தான் இக்கிராமத்தின் பிரதான தொழில். இங்கிருந்து வேளாண் பொருள்கள் மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இங்கு உள்ளோரின் மகன், மகள்கள் என சுமார் 65 % பேர் பெரும்பாலும் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். அவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு அங்கிருந்து பணம் அனுப்புகின்றனர். தங்கள் கிராமத்தில் சொந்தத் தொழிலும் செய்கின்றனர். இதனால், அக்கிராமம் இப்பெரும் வளர்ச்சியை பெற்றுள்ளது. 1968ல் லண்டனில் மதாபர் கிராம சங்கம் தொடங்கப்பட்டது. வெளிநாட்டில் வசிக்கும் இக்கிராம மக்களை ஒருங்கிணைக்கும் பணியை அச்சங்கம் செய்துவருகிறது.