ஜனவரி, பிப்ரவரியில் கொரோனா தாக்கம் குறைந்து கொண்டே வந்தது. இதன் காரணமாக ஜனவரி முதலே படிப்படியாகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஹால்கள், மால்கள் தியேட்டர்களில் 100 சதவீத அளவுக்கு மக்கள் அனுமதிக்கப்பட்டார்கள். மத்திய அரசு தொடர்ந்து தனி நபர் இடைவெளி, முக கவசம், கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என கூறியும் பலர் கேட்கவில்லை. தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என மத்திய அரசு அறிவித்த போது, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா தடுப்பூசி நம்பகத் தன்மையற்றது என்றார். காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுக்கும், கொரோனாவை மையப்படுத்தி மத்திய அரசை கடுமையாகத் தாக்குவதே தொழிலாகிவிட்டது.
எதிர்க்கட்சிகளில் உள்ள மருத்துவர்கள் ’தடுப்பூசி எதிர்விளைவுகள்’ என்பதாகப் பரப்பிய பொய்கள்தான் கொடூரம். கொரோனாவால் இறப்பவர்களை விட, தடுப்பூசி மருந்தால் அதிகமானவர்கள் இறப்பார்கள் என்று ஒரு புரளி கிளப்பினார்கள். மக்களுடைய ‘DNA’-யைத் திரட்டுவதற்கு, மாற்றியமைப்பதற்கு தடுப்பூசி திட்டம் ஒரு போர்வை என்பதாக இன்னொரு புரளி! தடுப்பூசி மருந்தில் கண்காணிப்பிற்கான மென்பொருள், மைக்ரோ-சிப் இருக்கும் என்றெல்லாம் அளந்தார்கள். இந்த வைரஸ் அதிவேகத்தில் உருமாறிக் கொண்டிருப்பதால் தடுப்பூசி மருந்து செயல்படாதாம், சொன்னார்கள்! பிரதமர் தடுப்பூசி போட்டுக் கொண்டதை, மோடி பி-காம்ப்ளெக்ஸ் ஊசி போட்டுக் கொண்டு புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கிறார் என எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்ததுதான் அக்கிரமம்.
ஊசிப் போன வாதம்
கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அறிவிக்கப்பட்ட உடனேயே, இந்த விவகாரத்தை விரிவாகக் கையாண்ட உள்துறை தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் தலைவரான காங்கிரஸ் பிரமுகர் ஆனந்த் சர்மா, பாரத் பயோடெக்கின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்க எந்த நாடும் முன்வரவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார். மூன்றாம் கட்ட சோதனை நடத்தி அதன் திறனை உறுதி செய்யவில்லை என்று பேசினார். பாரத் பயோடெக் உருவாக்கிய சுதேசி தடுப்பூசி கோவாக்சின், அவசரகால சூழ்நிலைகளில் பயன் பாட்டிற்கு அனுமதி வழங்கலாம் என மத்திய மருந்து அதிகார சபையின் நிபுணர் குழு பரிந்துரைத்தது. ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் சசி தரூர், ஜெய்ராம் ரமேஷ், ஆனந்த் சர்மா போன்றவர்கள் பரிந்துரை குறித்தே குறை கூறினார்கள். சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ், கோவிட் எதிர்ப்பு தடுப்பூசி நாட்டில் “பாஜக ஊசி” என்றார்!
”கொரோனா பரவலைத் தடுக்க, தடுப்பூசி எடுத்துக் கொள்வது சிறந்த பாதுகாப்பு” என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிரதமருக்கு கடிதம் எழுதினார். ஆனால், அவரது கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களும் சில மாநில முதல்வர்களும் நம் நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசி குறித்து சந்தேகத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்ததுதான் கூத்து. இதெல்லாம் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் தடுப்பூசி குறித்து மக்களுக்குத் தயக்கம் ஏற்படவே வழிவகுத்தது. ஆனால் தற்போது தடுப்பூசி பற்றாக்குறையாக இருப்பதாக மத்திய அரசின் மீது குற்றம் சுமத்துகிறார்கள் இந்த அரசியல்வாதிகள்! “தமிழகத்தில் சென்ற வாரம் கொரோனா தொற்று அதிவேகமாக பரவியது. தடுப்பூசியை உரிய நேரத்தில் வழங்காமல், சுமார் 5.84 கோடி தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது பா.ஜ.க. அரசின் பொறுப்பின்மையைக் காட்டுகிறது. உயிர் காக்கும் தடுப்பூசி போடுவதை ’திருவிழா’ என பெயர் சூட்டி பிரதமர் மோடி தனது அரசின் நிர்வாகத் திறமையின்மையை திசை திருப்புகிறார்” இப்படி டுவிட்டரில் பதிவிட்டார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.
தடுப்பூசிகள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட போது, தமிழகத்தில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் கொரோனா பரவல் குறையத் தொடங்கியது என்பதை புரிந்து கொள்ளாமல் அரசியல் செய்கிறார். தமிழகத்தில் சினிமா பிரபலங்கள் மரணமடைந்த போது, கொரோனா தடுப்பூசி பற்றிய அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக சந்தேகங்களைப் பரப்பினார்கள். இதற்கு தமிழக ஊடகங்களும் உடந்தை.
சமத்துவப் போர்வை
கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிகார் தேர்தலின் போது, கொரோனா தொற்று மிக அதிக அளவில் இருந்த போதே, மெய்நிகர் பிரச்சாரம் மட்டுமே செய்ய வேண்டும். பொதுக் கூட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்தக் கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்று கொண்டது பாஜக. ஆனால், “மெய்நிகர் பிரச்சாரம் சமூக மற்றும் பொருளாதார பாகுபாட்டை உறுதிப்படுத்தும். சமத்துவ கொள்கைக்கு எதிரானது. இணைய வசதியில்லாத ஏழை மற்றும் கிராமப்புற மக்களை ஜனநாயக கடமையில் பங்கேற்பதிலிருந்து விலக்கும். ஆகவே நாங்கள் இதை ஏற்க மாட்டோம். பொதுக் கூட்டங்கள், பேரணிகள் கட்டாயம் நடத்துவோம். இந்த முறையானது அரசியல் கட்சிகளிடையே தேர்தல் களத்தில் சமநிலையில்லாத நிலையை தேர்தல் ஆணையமே, அதிகாரப்பூர்வமாக உருவாக்கும் கேலிக்கூத்து. தேர்தல் பிரச்சாரத்தை முடக்கி சில கட்சிகளை வெளியேற்ற செய்யும் சதி” என்று காங்கிரஸும் கம்யூனிஸ்டுகளும் வாதிட்டன. ஆனால், இன்று வழக்கம் போல தேர்தல் ஆணையத்தை குறைகூறியது மட்டுமில்லாமல், தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் கொரோனா பரவல் அதிகமாக மோடியும், பா.ஜ.க.வும் காரணமென குற்றச் சாட்டு வைக்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் அடியொற்றி உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் கருத்து வெளியிட்டதுதான் சோகம்.
ஆக்சிஜன் அரசியல்
“உண்மை மறைக்கப்படுகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை மறுக்கப்படுகிறது. இறப்புகள் குறைத்துக் கூறப்படுகின்றன. இந்திய அரசுதான் இவை எல்லாவற்றையும் செய்கிறது. அதுவும் அவரது (மோடி) மாயையான தோற்றத்தை காப்பாற்று வதற்காகத்தான். தடுப்பூசி உற்பத்தியாளர்கள் ரூ.1.11 லட்சம் கோடி லாபம் சம்பாதிக்க மோடி அரசு அனுமதித்துள்ளது. இத்தகைய வெட்கக்கேடான தடுப்பூசி லாபத்தை எவ்வாறு அனுமதிப்பது? பெருந்தொற்று காலத்தில் இந்த லாபத்துக்கு மோடி அரசு ஏன் உடந்தையாக இருக்கிறது? இதற்கு பிரதமர் மோடி கட்டாயம் பதில் அளிக்க வேண்டும்” என ரண்தீப் சுர்ஜேவாலா ஆர்ப்பாட்டமாக அறிவித்தார்.
இது அப்பட்டமான பொய் என்பது காங்கிரஸ் கட்சிக்கு நன்கு தெரியும். ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ள மாநிலங்களில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களும், அவர்களின் கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலங்களும் அடக்கம். அந்த அரசுகளின் முதல்வர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏன் ஏற்பட்டது என்பதற்கு உரிய விளக்கத்தை கொடுப்பதற்கு முன் மோடி மீது இவர்கள் பாய்வது இவர்களின் உள்நோக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுகிறது. இதற்கு அவர்களுடய முரண்பட்ட அறிக்கைகளே சாட்சி. “தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ள நேரத்தில் மாநிலத்திலிருந்து 45 டன் ஆக்சிஜனை தமிழக அரசுக்கே தெரியாமல் மத்திய அரசு மற்ற மாநிலங்களுக்கு அனுப்பியது மிகுந்த வேதனை அளிக்கிறது. கொரோனா முதல் அலை போல இரண்டாவது அலையிலும் அ.தி.மு.க அரசு இவ்வளவு அலட்சியம் காட்டுவது கண்டனத்திற்குரியது” என தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சாடுவது விவரமற்ற பேச்சு. தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படவில்லை, இங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது என்று தெரிந்தும், ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் பொய் பரப்புகிறார்கள்.