இதுவரை உலகளவில் கிட்டத்தட்ட 30 லட்சம் பேரைக் கொன்றுள்ளதுடன் உலகப் பொருளாதாரத்தையும் சீர்குலைத்துள்ளது கொரோனா. இது குறித்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, செச்சியா, டென்மார்க், எஸ்டோனியா, இஸ்ரேல், ஜப்பான், லாட்வியா, லிதுவேனியா, நார்வே, கொரியா குடியரசு, ஸ்லோவேனியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டு அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டது. அதில், கோவிட் -19 வைரஸின் தோற்றம் மற்றும் அதன் பரவல் குறித்த தகவல்களைப் பகிர்வதில் சீனா மிகவும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த முழுமையான அறிக்கை வெளியாவதில் ஏற்படும் காலதாமதம் குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘கொரோனா தொற்றுநோயை நன்கு புரிந்துகொள்ள கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்’ என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கேட்டுக்கொண்டுள்ளார். சீனாவின் வுஹானில் உள்ள ஒரு ஆய்வகத்தில் வைரஸ் தோன்றியதற்கான கோட்பாடுகள் வலுவாக உள்ளது என, முன்னாள் சி.டி.சி இயக்குனர் டாக்டர் ராபர்ட் ரெட்ஃபீல்ட் கடந்த வாரம் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.