ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ள பிரம்மாண்டமான ராமானுஜர் சிலையை பார்வையிட்டு அங்கு வழிபாடு நடத்தினார். அப்போது உரையாற்றிய அவர், ‘ஒருவர் எப்போதும் மற்ற தனிப்பட்ட நலன்களை விட தேச நலனுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். நினைவில் கொள்ளுங்கள், ‘ஹிந்து நலன்’ அதாவது தேச நலனுக்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும். மொழி, ஜாதி போன்ற பிற நலன்கள் நமக்கு இரண்டாம் பட்சம். நமக்குள்ளாகவே சண்டையிடத் தூண்டும் எதிலும் நாம் ஈடுபட மாட்டோம். கண்ணியத்துடன் வாழ்வோம். நம்மை எதிர்த்து நிற்க யாருக்கும் சக்தி இல்லை என்பதுதான் நமது பலம். நம்மை அழிக்க அவர்கள் எவ்வளவோ முயற்சித்தனர். ஆனால் அது நடக்கவில்லை. நம்மை அவர்களால் அழிக்க முடிந்திருக்கும் என்றால் அது கடந்த ,1000 ஆண்டுகளில் நடந்திருக்கலாம். இன்றும் நமது 5,000 ஆண்டுகள் பழமையான சனாதன தர்மம் அப்படியே உள்ளது’ என கூறினார். இந்நிகழ்ச்சியில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹானும் கலந்து கொண்டார்.