ஆம் ஆத்மி கட்சி, டெல்லி கலால் வரிக் கொள்கையின் மூலம் பெறப்பட்ட குற்றச் செயல்களின் வருமானத்தை, பஞ்சாப் மற்றும் கோவாவில் தேர்தல்களுக்கு நிதியளிக்க பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை தனது துணை குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், ஆம் ஆத்மி தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயர், ‘சவுத் குரூப்’ நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட ரூ. 100 கோடியை பிரசாரம் தொடர்பான பணிகளுக்கு பணம் செலுத்துவதில் ஈடுபட்டார். சேரியட் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம், ஆம் ஆத்மி கட்சியினரால் கோவா தேர்தல் பிரச்சாரத்திற்காக விளம்பரம் மற்றும் பிற வேலைகளில் ஈடுபட்டனர். பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி அமைந்த பிறகு, விஜய் நாயர் அக்கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடனான செல்வாக்கையும் அணுகலையும் பயன்படுத்தி, தனது சட்டவிரோதமான நடவடிக்கைகளை நிறைவேற்ற பஞ்சாபின் கலால் துறையின் அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தினார் என பல குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன. அமலாக்கத்துறை தாக்கல் செய்த இந்த குற்றப்பத்திரிகை குறித்து ஆம் ஆத்மி தலைமையினான அரசு எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அதை கற்பனையான குற்றச்சாட்டு என்று கூறியுள்ளார். மேலும், “இந்த (மத்திய) அரசின் ஆட்சியில், அமலாக்கத்துறை இதுவரை 5,000 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்திருக்க வேண்டும். அந்த வழக்குகளில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர்? அமலாக்கத்துறை அனைத்து வழக்குகளும் போலியானவை. அவை அரசுகளை உருவாக்கவும் உடைக்கவும் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கவும் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஊழலை ஒழிப்பதற்காக அமலாக்கத்துறை வழக்குகளைத் தாக்கல் செய்யவில்லை” என்றார்.