பாப்பாக்குடி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டித் தெருவைச் சேர்ந்த மாரியம்மாள் என்ற சிறுமி, சேரன்மகாதேவி பகுதியில் சேகரித்த பழைய பொருள்களை முக்கூடலில் உள்ள ஒரு பழைய இரும்பு கடையில் விற்பதற்காக தனது குடிசையில் கொட்டி தரம் பிரித்துக் கொண்டிருந்தார். அந்தக் கழிவுகளோடு ஒரு பர்சும் சேர்ந்து இருந்துள்ளது. அதைப் பிரித்துப் பார்த்த போது, ரூபாய் நோட்டுகள் இருந்ததைக் கண்டு அவர் அருகில் இருந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். அதை பரிசோதித்த போலீசார், 58 ஆயிரத்து 210 ரூபாய் பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போனுடன் ஆதார் அட்டையும் இருந்ததால், உரிமையாளரை கண்டுபிடித்து ஒப்படைத்துள்ளனர். முக்கூடல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் காவுராஜன், குப்பை சேகரித்து வாழ்க்கை நடத்தும் மாரியம்மாளின் நேர்மையைப் பாராட்டி, குத்துவிளக்கு ஒன்றை பரிசளித்துள்ளார்.