விளக்கம் கேட்டுள்ள ஆளுநர்

கடந்த ஜூலை மாதம் மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

ஆளுநர் ஆர்.என்.ரவியை சமீபத்தில் சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், கடந்த ஜூலை மாதம் மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். பிரதமரின் சென்னை வருகையின்போது பாதுகாப்பு சோதனைக்காக பயன்படுத்தப்படும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் சரியாக வேலை செய்யவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். இதை மறுத்த தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு, ‘பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் எந்த குறைபாடும் இல்லை’ என தெரிவித்தார். இதனையடுத்து, தமிழக பா.ஜ.க தரப்பில், இந்த புகாரை மத்திய உள்துறையின் கவனத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தும்படி கோர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அண்ணாமலையின் குற்றச்சாட்டு தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்கும்படி தெரிவித்துள்ளார். தமிழக அரசின் அறிக்கையின் அடிப்படையில், மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கையை அனுப்பி வைப்பார்.