கொல்கத்தா உயர்நீதிமன்றம் சி.பி.ஐக்கு மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த தேர்தலுக்குப் பிறகு நடந்த கொலை, கொள்ள, கற்பழிப்பு, வன்முறை சம்பவங்கள் உள்ளிட்ட வழக்குகளை விசாரிக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரிக்க முன் எப்போதும் இல்லாத வகையில், 109 அதிகாரிகள் கொண்ட ஒரு பெரிய குழு மேற்குவங்க மாநிலத்தில் விசாரணையில் களமிறங்கியுள்ளது. இதற்காக மாநிலத்தை நான்கு மண்டலங்களாகப் பிரித்து நான்கு தனித்தனி பிரிவுகள் நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் தலா ஒரு கூடுதல் இயக்குனர் தலைமையில் நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில டி.ஐ.ஜிக்கள், 16 காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்டோர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை காவல்துறையினர் அளித்த விவரங்கள் போதுமானதாக இல்லாததால் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க மேற்கு வங்க காவல்துறை தலைவர் பணிக்கப்பட்டுள்ளார். தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்.ஹெச்.ஆர்.சி) அறிக்கையிள் உள்ள அனைத்து வழக்குகளையும் இக்குழு ஆராயும்.
கொல்கத்தா உயர்நீதிமன்றம், சி.பி.ஐ விசாரணையுடன், மேற்கு வங்க மாநில காவல்துறை அதிகாரிகளை கொண்ட சிறப்பு விசாரணை குழு (எஸ்.ஐ.டி) ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அக்குழு இதில் சம்பந்தப்பட்ட மற்ற வழக்குகளை விசாரிக்க வேண்டும். இவ்விரு அமைப்புகளின் விசாரணைகளும் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் இருக்கும். விசாரணை அறிக்கை ஆறு வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கூறியுள்ளது.