நமது தேசத்தின் பொறியியல் தந்தை என போற்றப்படுபவர் மோக்ஷ குண்டம் விஸ்வேஸ்வரய்யா. இவர் சுதந்திரத்திற்கு முந்தைய மைசூரில் பிறந்தவர். நாட்டின் பாசனத்துறை வளர்ச்சி மற்றும் அணைக்கட்டு திட்டங்களின் முன்னோடியாக விளங்கியவர். கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் சிற்பி என்றும் இவர் பாராட்டப்படுகிறார். அணைக்கட்டு நிர்வாகத்தில் தானியங்கி மதகை கண்டுபிடித்த பெருமைக்குறியவராகவும் இவர் கருதப்படுகிறார். பாசனத் திட்டங்கள் மட்டும் அல்லாமல், ஆலைகள், பொறியில் கல்லூரிகள், பல்கலைக்கழகம் என பலவற்றை உருவாக்கியவர் விஸ்வேஸ்வரையா. பொருளாதார திட்டமிடலை முன்வைத்த முன்னோடி அறிஞராகவும் கருதப்படும் விஸ்வேஸ்வரய்யா தனது இறுதிக்காலம் வரை பணி செய்யும் வழக்கம் கொண்டவராகவும் இருந்தார். தேசத்திற்கான விஸ்வேஸ்வரய்யாவின் பங்களிப்பு, சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு நாட்டின் மிகப்பெரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது. பொறியியல் வல்லுனர்களுக்கு எல்லாம் உந்துசக்தியாக கருதப்படும் அவரது பிறந்த நாள் ஆண்டுதோறும் பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இருபதாம் நூற்றாண்டில் பாரதத்தின் கட்டமைப்பில் முக்கிய பங்கு வகித்த விஸ்வேஸ்வரையாவின் நினைவு தினம் இன்று.