மோடியை இளையராஜா பாராட்டிய செய்திகள் வெளியானதை தொடர்ந்து அது அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகலை ஏற்படுத்தியது. கடந்த 20ம் தேதி கமலாலயத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அண்ணாமலை, “பிரதமர் மோடியை இளையராஜா அம்பேத்கருடன் ஒப்பட்டதில் என்ன தவறு உள்ளது? அம்பேத்கர் ஆர்.எஸ்.எஸ். குறித்து தெரிவித்த கருத்து குறித்து நேருக்கு நேராக திருமாவளவன் விவாதம் நடத்த தயாரா?” என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த திருமாவளவன், “அண்ணாமலை ஒரு சப் ஜூனியர். அவரோடு விவாதிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து ஒரு சப் ஜூனியரை அனுப்பி வைக்கிறேன்” என எகத்தாளமாக பதில் அளித்தார். இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சங்கத்தமிழன் நேர்காணல் கொடுத்துக் கொண்டிருந்தபோது, பா.ஜ.க தலைவர் அண்ணாமலையைஅலைபேசியில் தொடர்புகொண்டு, விவாதத்திற்கு அழைத்தார். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “அமித்ஷா வருவதால் 2 நாட்கள் ஊரில் இருக்க மாட்டேன். 26 ஆம் தேதி சந்திக்கலாம்” என்றார். அதற்கு “புரட்சியாளர் அம்பேத்கருடைய தொகுப்பு எண் 8 என்ற புத்தகத்தை வாய்ப்பிருந்தால் படித்து விட்ட வாருங்கள்” என்று சங்கத்தமிழன் சொல்ல, “நான் படிச்சிருக்கேன் அண்ணா, ஹிந்துத்துவா அம்பேத்கர் என்ற புத்தகத்தை நானும் வைத்திருக்கிறேன்” என்று அண்ணாமலை பதிலளித்தார்.