ஆயுர்வேதம் தந்த மாற்றம்

ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள்துறை இணையமைச்சர் கவுஷல் கிஷோர், “நான் ஆயுர்வேதத்தை வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டேன். அதன் மூலம் சிறிது காலத்திலேயே என் எடையை குறைத்தேன். டெல்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் (ஏ.ஐ.ஐ.ஏ) மருத்துவர்களின் மேற்பார்வை, வழிகாட்டுதலின் கீழ், முதல் 13 நாட்களில் 9 கிலோ எடையைக் குறைத்தேன். மொத்தமாக 20 கிலோ  எடையை என்னால் குறைக்க முடிந்தது.  இந்த ஆண்டு பிப்ரவரியில், பிரதமர் நரேந்திர மோடி, தனது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில், கடந்த ஏழு ஆண்டுகளில், நாட்டில் ஆயுர்வேதத்தை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாகக் கூறினார். ஆயுர்வேதத்தின் நன்மைகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஆயுர்வேதம் என் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் யோகா மற்றும் ஆயுர்வேதத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இதனால் அவர்களின் வாழ்க்கை சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் அமையும். ஏ.ஐ.ஐ.ஏவில் நான் சிகிச்சை பெற்றபோது ​​ உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் மக்கள் அங்கு வந்ததைக் கண்டேன். என் மனைவி, மகன், மருமகள், உறவினர்கள் என பலரும் தற்போது ஆயுர்வேத சிகிச்சைகளை எடுத்துக்கொள்கின்றனர். உலகம் முழுவதும், சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாட மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கும் வேளையில், முழு உலகமும் ஆயுர்வேதத்தையும் விரைவில் ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறேன். உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆயுர்வேதம் மற்றும் யோகாவால் ஈர்க்கப்படுகிறார்கள். நான் ஆயுர்வேதத்தை வலியுறுத்துவதற்கான மற்றொரு காரணம், அது எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாதது,பல நோய்களுக்கு மிக எளிதாக சிகிச்சை அளிக்கிறது என்பதுதான்” என கூறினார்.

ஏ.ஐ.ஐ.ஏ இயக்குனர் டாக்டர் தனுஜா நேசாரி, “ஆயுர்வேதம் என்பது ஒரு முழுமையான அறிவியல், இது மனம், உடல், ஆன்மா இடையே நல்லிணக்கத்தை உருவாக்கவும் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது. கொரோனா உள்ளிட்ட நோய்களைத் தடுப்பதில் சிறந்து விளங்குகிறது. கொரோனாவுக்குப் பிந்தைய சில சிக்கல்களில் இருந்து விடுபட ஆயுர்வேதமும் உதவும். பாரம்பரிய பாரத மருத்துவ முறையின் நன்மைகளைப் பற்றி பாரதத்துக்கு வெளியே உள்ளவர்கள் அதிகம் புரிந்து கொண்டுள்ளனர். தவறான வாழ்க்கை முறை, சமநிலையற்ற உணவு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்த ஆயுர்வேதம் பயனுள்ளதாக இருக்கும். கொரோனாவின்போது, ​​அதிகமான மக்கள் ஆயுர்வேதத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தனர். ஆரோக்கியம் என்பது வீட்டு வாசலில் உள்ள மருந்துக் கடையில் மட்டும் வாங்க முடியாத ஒன்று என்ற செய்தியை அது உலகுக்குச் சொல்லியது’ என தெரிவித்தார்.