திருணமூல் கட்சி சார்பாக கோவாவிற்கு சென்ற தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், ‘பா.ஜ.க வென்றாலும் தோற்றாலும், பாரத அரசியலின் மையமாக பா.ஜ.க தொடர்ந்து இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. காங்கிரஸ் கட்சிக்கு முதல் 40 ஆண்டுகள் எப்படியோ பா.ஜ.கவுக்கும் அப்படித்தான். பா.ஜ.க எங்கும் சென்று விடாது. அனைத்திந்திய அளவில் 30 சதவீத வாக்குகள் பெற்ற கட்சி அவ்வளவு சுலபத்தில் மறைந்து விடாது. மோடியை வேண்டுமானால் மக்கள் நிராகரிக்கலாம், ஆனால் பா.ஜ.க எங்கும் சென்றுவிடவில்லை. அடுத்த பல பத்தாண்டுகளுக்கு பா.ஜ.கவுடன் நாம் போராடித்தான் ஆக வேண்டும். பிரதமர் மோடியின் செல்வாக்கு காலப்போக்கில் சரிந்து விடும் என்று சோனியாகாந்தி குடும்பம் நினைக்கிறது. அவர்கள் ஒரு மாயையில் இருக்கிறார்கள். அவர்கள் நினைப்பது நடக்கப் போவதில்லை. ராகுல் காந்தியின் சிக்கல் என்னவென்றால், மோடியை மக்கள் தூக்கி எறிந்துவிட்டால் பா.ஜ.க தானாக அழியும் என்று நினைக்கிறார், அது நடக்காது. மோடியின் பலம் என்ன என்பதை ஆராய்ந்து புரிந்து கொண்டாலே தவிர அவரை வீழ்த்த ஒரு போட்டியாளரை கண்டுப்பிடிக்க முடியாது. ஆனால் மோடியின் பலம் என்னவென்பதை பலரும் ஆராய நேரம் செலவிடுவதில்லை. அவரைத் தொடர்ந்து புகழ்ச்சியில் வைத்திருப்பது என்பதை கண்டுப்பிடிக்க வேண்டும். இது தெரிந்தால்தான் அவருக்கு எதிரானவரை கண்டுப்பிடிக்க முடியும். மோடியின் இடத்துக்கு ராகுல் காந்தியால் ஒரு போதும் போட்டியிட முடியாது அவரை தோற்கடிக்கவும் முடியாது. காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவு குறைந்து வருகிறது’ என தெரிவித்துள்ளார்.