உலக அளவில் சமீபத்தில் பரபரப்பான ஒரு விஷயம் இடதுசாரி, லிபரல் எண்ணம் கொண்ட சில அமெரிக்க பல்கலைக் கழகங்கள் ‘உலகலாவிய ஹிந்துத்துவாவை அகற்றுவோம்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய ஒரு கருத்தரங்கு. இதற்கு எழுந்த கண்டனங்களால் சில கல்லூரிகள் இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறின.
எனினும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஹிந்துத்துவாவை எதிர்த்து பேசிய லிபரல்கள், கம்யூனிச சிந்தனைவாதிகளின் பேச்சு, கடைசியில் ஹிந்துத்துவாவின் மேன்மையை அவர்களுக்கு எடுத்துக்காட்டுவதாகவே அமைந்துவிட்டது.
அக்கருத்தரங்கில் பேசப்பட்டவற்றில் சுருக்கமாக ஒரு சில:
முதலில் ‘உலகலாவிய ஹிந்துத்துவாவை அகற்றுவோம்’ என்ற தலைப்பே தவறு, ஹிந்துக்கள் உலகிற்கு என்றுமே எதிராக இருந்தது இல்லை, சர்வே ஜனா சுகினோ பவந்து, வசுதைவ குடும்பகம் என்பதே ஹிந்துக்களின் தாரக மந்திரம்.
‘திருநங்கைகள், சம பாலீர்ப்புடையோர் உள்ளிட்ட சமூகத்தினர் (LGBTQ) ஹிந்து தேசியவாதிகள் ஏற்றுக்கொள்கிறார்கள்’ என்றனர் அவர்கள்.
இது நல்ல விஷயம்தானே, அனைவரையும் சமமாக, ஜாதி, மத, உடல், மொழி பேதமின்றி இறைவனின் படைப்பாக, ஒரே ஆன்மாவாக காண்பதுதானே ஹிந்து தர்மம். ஒரு மனிதனுடன் படுத்திருக்கும் மனிதன் நரகத்திற்குச் செல்வான் என்று எந்த ஹிந்து கடவுளும் சொல்லவில்லையே?
அடுத்ததாக, ஹிந்து தேசியம், பெண்களை சுதந்திரமாக இயங்க அனுமதிக்கிறது’ என்றனர்.
இக்கருத்து பெண்கள் சுதந்திரமாக இருப்பதில் லிபரல்களும் இடதுசாரிகளும் மகிழ்ச்சியடையவில்லை என்பதையே காட்டுகிறது. மேலும், ஹிந்து தேசிய இயக்கத்தில் பெண்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்கின்றனர் என்பதையும் உணர்த்துகிறது.
இம்மாநாட்டில் வழக்கம் போல பிராமண எதிர்ப்பு வாதம் இருந்தது. ஆனால் ‘நடுத்தர வகுப்பினர் ஹிந்துத்துவத்தின் பங்காளிகள் ஆகிவிட்டனர்’ என இதில் அவர்கள் குறிப்பிட்டனர்.
அவர்களின் இந்த முரண்பட்ட கருத்துகள், நடுத்தர வகுப்பினரில் உள்ள அனைத்து ஹிந்துக்களும் ஜாதி வேறுபாடு இன்றி ஹிந்துத்துவத்தை தெரிந்தோ தெரியாமலோ பின்பற்றி வருகின்றனர். அரசியல்வாதிகளின் பிராமண எதிர்ப்பு வாதம் மக்களிடம் எடுபடவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது.
இம்மாநாட்டில் இப்படி பல விஷயங்கள் இடம் பெற்றன. ஹிந்துத்துவாவை எதிர்க்க போட்ட மாநாடு, ஹிந்துத்துவத்தின் மேன்மையை உலகிற்கு புரியவைப்பதாகவே அமைந்து விட்டது. அவர்களின் மனசாட்சிக்கு இது நன்றாக தெரியும், என்றாலும் ‘குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்பதை போல, அவர்கள் இதனை ஒப்புக்கொள்ளப் போவதில்லை, தொடர்ந்து எதிர்க்கவே செய்வார்கள் என்பதும் நமக்குத் தெரியும்.
சர்வே ஜனா சுகினோ பவந்து.