மயிலாடுதுறையில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தருமபுரம் சைவ ஆதின திருமடத்தில் ஆண்டுதோறும் ஆதி குருமுதல்வர் குருஞானசம்பந்தர் குருபூஜை பெருவிழா சிவநெறி தெய்வத் தமிழ் மாநாடு ஞானபுரீஸ்வரர் கோவில் பெருவிழா 11 நாட்கள் கொண்டாடப்படும். இதில் 11ம் நாள் குருபூஜை விழாவில் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது குருமகா சன்னிதானத்தை வெள்ளி சிவிகை பல்லக்கில் அமர வைத்து பக்தர்கள் துாக்கிச் சென்று ஆதின திருமடத்தின் நான்கு வீதிகளில் வலம் வருவார்கள்.
ஹிந்துக்களின் விழாக்களை மட்டுமே சீர்குலைக்க முயற்சிக்கும் சில திராவிட அமைப்பினரும் இடதுசாரிகளும், மனிதனை மனிதன் துாக்கி செல்லும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என கோரி இதனை தடுக்க முயன்றனர். உடனே, தி.மு.க அரசும் மயிலாடுதுறை ஆர்.டி.ஓ மூலமாக பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதித்தது. இந்த தடைக்கு பல்வேறு ஆதீனங்கள், பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள், வி.ஹெச்.பி, இந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்பினர், பாரம்பரியமாக பல்லக்கு தூக்கும் உரிமை பெற்ற சமூகத்தினர், பக்தர்கள், பொதுமக்கள் என பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து வேறுவழியின்றி பின்வாங்கியது தமிழக அரசு. இதையடுத்து திட்டமிட்டபடி, பட்டினப்பிரவேசம் கோலாகலமக நடந்தது.
இவ்விழாவில், மதுரை ஆதினம், செங்கோல் ஆதினம், சூரியனார் கோவில் ஆதினம், துலாவூர் ஆதினம், வேளாக்குறிச்சி ஆதினம், தருமபுரம் ஆதினம் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை எச்.ராஜா, இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பட்டினப் பிரவேச நிகழ்ச்சியை கண்டு தரிசித்து குரு அருளைப் பெற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு 600க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பட்டினப்பிரவேசம் விழாவை தடைசெய்யக் கோரி, மயிலாடுதுறை எம்.எல்.ஏ., அலுவலகம் அருகே மக்கள் அதிகாரம் இயக்கம், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், தமிழர் உரிமை இயக்கம், விவசாயிகள் விடுதலை முன்னணி, வி.சி.க., உள்ளிட்ட அமைப்பினர் கருப்பு கொடியேந்தி போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 97 பேரை காவலர்கள் கைது செய்தனர்.
தமிழகத்தில் இதுவரை ஒருசில நூறு பேர் மட்டுமே கலந்துகொண்ட, சில ஆயிரம் பேருக்கு மட்டுமே தெரிந்து நடந்துவந்த இந்த பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு இன்று பல்லாயிரக் கணக்கானவர்கள் கலந்துகொண்டுள்ளனர், கோடிக்கணகானவர்கள் இது குறித்து அறிந்துகொண்டனர், ஹிந்து மதம், குரு பாரம்பரியம், ஆதீனங்கள், மடங்கள், அதன் மகத்துவம் குறித்த ஒரு புரிதல் மக்களிடம் ஏற்பட்டுள்ளது, ஹிந்துக்களிடம் ஒரு ஒற்றுமை உணர்வு உருவாகியுள்ளது என்றால் அதற்கு திராவிட கும்பலின் எதிர்ப்பு மட்டுமே காரணம் என்றால் அது மிகையல்ல.
மதிமுகன்