டெஸ்லா அசோக் எல்லுசாமி

உலகமே இன்று வியந்து பார்க்கும் ஒரு முக்கியமான நிறுவனங்களில் ஒன்று டெஸ்லா நிறுவனம். இந்நிறுவனம் 20 வருடங்களில் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டுள்ளது. குறிப்பாக இன்று உலக நாடுகள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பெட்ரோல், டீசல் கார்களை மொத்தமாகத் தடை செய்யும் மன உறுதியை உருவாக்கியுள்ளது. டெஸ்லா, அனைத்துக் கார் பிராண்டுகளுக்கும் முன்னோடியாக இருக்க மிக முக்கிய காரணம் விமானத்தில் இருப்பது போலவே டெஸ்லா கார்களில் இருக்கும் ஆட்டோ பைலட் சேவைதான். கூகுள் உட்படப் பல டெக் சேவை நிறுவனங்கள் நீண்ட காலமாக ஆட்டோனமஸ் கார்களைத் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி பல வருடமாக முயற்சித்து வருகையில், டெஸ்லா இதில் குறைந்த காலகட்டத்திலேயே வெற்றி கண்டதுடன் தொடர்ந்து மெருகேற்றி வருகிறது. இந்நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் ஒரு விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, டெஸ்லா ஆட்டோபைலட் சேவை குறித்துப் பேசும்போது என்னையும், ஏ.ஐ பிரிவுத் தலைவரான ஆண்ட்ரேஜ் பாராட்டுவார்கள். ஆனால் உண்மையில் இந்தப் பாராட்டுக்குச் சொந்தக்காரர் அசோக் தான். இவர்தான் ஆட்டோபைலட் இன்ஜினியரிங் பிரிவின் தலைவர். இவர் தலைமையில் தான் டெஸ்லா ஆட்டோபைலட் சேவை உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு உள்ளது. அசோக் தான் டெஸ்லா ஆட்டோபைலட் அணிக்கு முதல் ஆளாகத் தேர்வு செய்யப்பட்டவர் என்று கூறியுள்ளார். யார் இந்த அசோக்? அசோக் எல்லுசாமி என்பது இவருடைய முழுப்பெயர். 2005 முதல் 2009வரை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இ.சி.இ பிரிவில் இளங்கலை படித்து, அமெரிக்காவின் கார்கி மெலான் பல்கலைக்கழகத்தில் ரோபோட்டிக்ஸ் சிஸ்டம்ஸ் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். 8 மாதம் வோக்ஸ்வாகன் எலக்ட்ரானிக் ரிசர்ச் லேபில் ஆராய்ச்சி பயிற்சியாளராகப் பணியாற்றினார். 2014ல் டெஸ்லா ஆட்டோபைலட் பிரிவின் சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணியில் சேர்ந்த அசோக் எல்லுசாமி கடந்த 8 வருடத்தில் டெஸ்லா ஆட்டோபைல்ட் பிரிவின் தலைவராக உயர்ந்துள்ளார்.