சட்ட விரோத பணப் பரிவர்த்தனை மற்றும் பயங்கரவாதிகளுக்கு அளிக்கப்படும் நிதி உதவியைத் தடுப்பதற்கான கொள்கைகளை வகுக்க, ஜி 7 அமைப்பைச் சேர்ந்த நாடுகள், எப்.ஏ.டி.எப்., எனப்படும், நிதி சார்ந்த அதிரடி நடவடிக்கை அமைப்பை உருவாக்கின. இந்த எப்.ஏ.டி.எப் கூட்டம் நடப்பதற்கு முன், உள்நாட்டில் நடக்கும் பணப் பரிமாற்ற மோசடி மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதி செல்லும் நடவடிக்கைகளை மத்திய அரசு தணிக்கை செய்வது வழக்கம். இத்தணிக்கை 2019ல் கடைசியாக நடத்தப்பட்டது. நம் நாட்டுக்கான எப்.ஏ.டி.எப்., அமைப்பின் மதிப்பீடு அடுத்த ஆண்டு மே மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நம் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள பணப் பரிமாற்ற மோசடி வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் நடவடிக்கையை வேகப்படுத்த அமலாக்கத் துறை, சி.பி.ஐக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பயங்கரவாத குழுக்களுக்கு நிதி உதவி அளிக்கவும், பணப் பரிமாற்ற மோசடியில் ஈடுபடவும் அதிக வாய்ப்புள்ள ரியல் எஸ்டேட், தங்க, வைர வியாபாரம், வங்கி பரிவர்தனை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் தீவிரமாக கண்காணிக்கும்படி ரிசர்வ் வங்கி, மத்திய விசாரணை அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.