கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், கோயில்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறநிலையத்துறை கமிஷனர் ரமண சரஸ்வதி அனைத்து கோயில் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘கோவிட் 19 நோய் பரவி வருவதால் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு வரும் போதும், விழாக்கள் நடைபெறும் போதும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தீவிரமாக பின்பற்றப்படுவதை கண்காணித்து உறுதிப்படுத்த தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான விழிப்புணர்வினை மக்களிடத்தில் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தபட்டுள்ளது. இதற்கு, மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பிக்கள், நகர காவல் ஆணையர், உள்ளாட்சி நிர்வாகங்கள், உள்ளூர் சுகாதாரத்துறை ஆகியவற்றோடு தொடர்பு கொண்டு அவர்களிடம் தேவையான ஆலோசனை பெற்றும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி இந்த விதிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.