ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகளை வழங்க பிரதம மந்திரி மலிவு விலை மருந்துகள் திட்டத்தை, மத்திய அரசின் பிரதான் மந்திரி பாரதிய ஜனஔஷதி பரியோஜனா (பி.எம்.பி.ஜே.பி) துவங்கியது. 2021 – 22 நிதியாண்டில் 8,300 மலிவுவிலை மருந்தகங்களை திறக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்த இலக்கை அதற்கு முன்பாக செப்டம்பர் இறுதியிலேயே அது நிறைவேற்றியுள்ளது. அடுத்த்தாக, வரும் 2024 மார்ச் மாதத்திற்குள் இவற்றின் எண்ணிக்கையை 10 ஆயிரமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த மலிவு விலை மருந்து கடைகளில் தற்போது 1,451 மருந்துகள், 240 அறுவை சிகிச்சைக் கருவிகள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், புதிய மருந்துகள், ஊட்டச்சத்து பொருட்கள், குளுக்கோமீட்டர், மால்ட் அடிப்படையிலான உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை விற்பனையும் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் தயாரிப்புகளின் தரத்தை உறுதி செய்வதற்காக உலக சுகாதார நிறுவனம் – நல்ல உற்பத்தி நடைமுறைகள் (WHO -GMP) சான்றளிக்கப்பட்ட சப்ளையர்களிடமிருந்து மட்டுமே மருந்துகள் வாங்கப்படுகின்றன.
அனைத்து மருந்துகளும் மையங்களுக்கு அனுப்புவதற்கு முன் அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களில் சோதிக்கப்படுகிறது. இங்கு கிடைக்கும் மருந்துகளின் விலை பிராண்டட் விலையை விட 30 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை குறைவாக உள்ளது. மேலும், அனைத்து கடைகளிலும் மருந்துகளின் நேரடி விநியோகத்தை உறுதி செய்வதற்காக நவீன தகவல் தொழில்நுட்ப இயக்கத்தளங்கள், விநியோகச் சங்கிலி அமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. பொதுமக்கள் எளிதில் இந்த மலிவு விலை மருந்தகங்களை தொடர்புகொள்ள ‘ஜன் ஔஷதி சுகம்’ என்ற அலைபேசி செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.