உக்ரைன் ராணுவத்தில் தமிழக மாணவர்

தமிழகத்தின் கோவை சுப்பிரமணியம்பாளையத்தைச் சேர்ந்தவர் 21 வயது மாணவரான சாய்நிகேஷ் ரவிச்சந்திரன். இவர் உக்ரைனில் படிக்கும் ஒரு விண்வெளி பொறியியல் மாணவர். அவர் இந்திய ராணுவத்தில் சேர விரும்பினார் ஆனால் உயரம் குறைவாக இருந்ததால் இணைய முடியவில்லை. அமெரிக்க ராணுவத்தில் இணைய முடியுமா என அறிய சென்னை அமெரிக்க தூதரகத்தையும் அணுகியுள்ளார். ஆனால், முடியாது என தூதரக அதிகாரிகள் தெரிவித்து விட்டன. இந்நிலையில், உக்ரைனிற்குப் படிக்க சென்ற அவர், அங்கு தற்போது துவங்கியுள்ள உக்ரைன் ரஷ்ய போரையடுத்து தனது ராணுவ ஆவலை தீர்த்துக்கொள்ள இதனை சரியான சந்தர்ப்பமாக அவர் பயன்படுத்திக்கொண்டார். உக்ரைன் அரசு தற்போது உருவாக்கியுள்ள தன்னார்வலர்களை கொண்ட ஜார்ஜிய நேஷனல் லெஜியன் துணை ராணுவப் பிரிவில் இணைந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். தனது மகனை மீட்டுத்தர அங்குள்ள பாரத தூதரகத்தை கோரியுள்ளனர். இதுகுறித்து அவரது வீட்டிற்கு விசாரிக்க சென்ற உளவுத்துறை அதிகாரிகள், அவரது அறை முழுவதும் ராணுவ வீரர்களின் உருவப்படங்கள் காணப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.