மதுரையை சேர்ந்த மணிமாறன் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘பழங்கால வரலாற்றுக்கு ஆதாரமான பெரும்பாலான தகவல்கள் கல்வெட்டுக்களில் இருந்துதான் கிடைக்கின்றன. அதன் முக்கியத்துவதை உணர்ந்தே 1961ல் கல்வெட்டியல் துறை ஏற்படுத்தபட்டது. பல்வேறு காலகட்டங்களில் கிடைத்துள்ள சுமார் ஒரு லட்சம் கல்வெட்டுகளில், 65 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழோடு தொடர்புடையவை. இந்நிலையில், மைசூர் கல்வெட்டியல் துறையில் உள்ள தமிழ்மொழி தொடர்பான கல்வெட்டுக்களை தமிழக கல்வெட்டியல் துறையிடம் ஒப்படைக்கவும், அவற்றை சட்டப்படி நவீன முறையில் பாதுகாக்கவும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், சென்னையில் உள்ள தொல்லியல்துறையின் கல்வெட்டியல் கிளையை தமிழ் கல்வெட்டியல் துறை என பெயர்மாற்றம் செய்ய வேண்டும். 6 மாதத்திற்குள் சென்னையிலுள்ள தமிழ் கல்வெட்டியல் கிளைக்கு, மைசூரிலுள்ள தமிழ் கல்வெட்டுக்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இடமாற்றம் செய்ய வேண்டும். அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு 6 மாதத்திற்குள்ளாக செய்துத்தர வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.