வாலாட்டும் டுவிட்டர்

மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, நமது நாட்டில் செயல்படும் சமூக வலைதளங்கள், மின்னணு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் குறைதீர் அதிகாரிகள், பாரதக் குடியுரிமை பெற்றவராகவும் அந்த நிறுவனத்தின் நிரந்தர பணியாளராகவும் இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், இதனை முதலில் ஏற்க மறுத்தது டுவிட்டர் நிறுவனம். பின், தர்மேந்திர சதுர் என்பவரை குறைதீர் அதிகாரியாக நியமித்தது. ஆனால், அவர் உடனேயே பதவி விலகினார். அடுத்து ஜெர்மி கெசல் என்ற அமெரிக்கரை நியமித்தது. இதைஅரசு ஏற்கவில்லை. பின்னர் வினய் பிரகாஷ் என்பவரை ஒப்பந்த அடிப்படையில் நியமித்தது. இது குறித்த விசாரணையின்போது நீதிபதி, ‘புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்பதில், டுவிட்டருக்கு விருப்பம் இல்லை என்பது நன்றாகத் தெரிகிறது. அதனால்தான், விதிகளை செயல்படுத்துவதில் அலட்சியம் காட்டுகிறது. ஒப்பந்த அடிப்படையில் குறைதீர் அதிகாரியை நியமித்ததை ஏற்க முடியாது. இன்னும் ஒரு வாரத்தில் நிரந்தர குறைதீர் அதிகாரியை டுவிட்டர் நியமிக்க வேண்டும்’ என கூறினார்.