மேற்கு வங்க மாநிலம் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கலியாகஞ்ச் என்ற இடத்தில் ஒரு மைனர் பட்டியல் சமூக சிறுமியின் உடல் அங்குள்ள கால்வாயில் மிதந்தது. அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறி, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். டயர்களை எரித்தும், பல கடைகளுக்கு தீ வைத்தும் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது, உயிரிழந்த சிறுமியின் உடலை காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லும் போது உரிய எந்த ஏற்பாடும் செய்யாமல் உடலை சாலையில் இழுத்துச் செல்லும் வீடியோ சமுக ஊடகங்களில் வைரலாக பரவியது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சலசலப்புகளுக்கு மத்தியில் இது மற்றொரு பிரச்சனையாக உருவெடுத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 4 அதிகாரிகள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (எஸ்சிபிசிஆர்) தலைவர் சுதேஷ்னா ராய், “இந்த சம்பவம் ஒரு மைனர் பெண் சம்பந்தப்பட்டது என்பதால் அதை பொது களத்திற்கு கொண்டு வர வேண்டாம் என்று முடிவு செய்தோம். எங்கள் குழுவினர் சிறுமியின் குடும்பத்தினரிடம் பேசி, முடிந்த உதவிகளை செய்வதாக உறுதியளித்தனர். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை வழங்க நாங்கள் அழுத்தம் கொடுப்போம். இந்த கடினமான நேரத்தில் நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம் என்று நாங்கள் குடும்பத்தினரிடம் கூறினோம். அவர்களுக்கு உதவி தேவைப்பட்டால் நேரடியாக அணுக எனது தொலைபேசி எண்ணை பாதிக்கப்பட்டவரின் உறவினர்களுடன் பகிர்ந்து கொண்டேன். கடந்த சில நாட்களாக ஏராளமானவர்கள் வருவதால் அவர்கள் சோர்வாக இருப்பதாக குடும்ப உறுப்பினர்கள் எங்களிடம் கூறினார்கள்” என்று தெரிவித்தார்.