தேசத் துரோகிக்கு ஆதரவா?

ஆம் ஆத்மி தலைமையிலான டெல்லி அரசில் சுகாதாரம், உள்துறை, மின்சாரம், பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்தர் ஜெயின். கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் தொடர்புடைய ஹவாலா பரிவர்த்தனைகளில் இவர் ஈடுபட்ட காரணத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் கைது குறித்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “ஆம் ஆத்மி கட்சி ஒரு நேர்மையான அரசியல் கட்சி. இது முற்றிலும் போலியானது, அரசியல் காரணங்களுக்காக அவர் வேண்டுமென்றே சிக்கவைக்கப்படுகிறார். சத்யேந்திர ஜெயின் சுத்தமானவராகவே வெளியே வருவார்” எனக் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், டெல்லி பா.ஜ.க தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, “ஷெல் (போலி) நிறுவனத்தின் கிளை நிறுவனங்கள் அமைச்சர் ஜெயினின் மனைவி பெயரில் இயங்குவது உண்மைதானே? 2010- முதல் 2016 வரை ஷெல் நிறுவனங்கள் மூலம் சத்யேந்தர் ஜெயின் ரூ.16.39 கோடி மோசடி செய்திருக்கிறார். டெல்லியில் உள்ள பல காலனிகளைச் சுற்றியுள்ள நிலங்களை ஷெல் கம்பெனிகள் மூலம் கையகப்படுத்தியிருக்கிறார். இது தொடர்பாக கெஜ்ரிவால் பதிலளிப்பாரா? ஊழல் தடுப்புச் சட்டத்தில் சத்யேந்திர ஜெயின் முதன்மை குற்றவாளி என்பது உண்மைதானே, 16.39 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் இன்னுமா உங்கள் அரசில் அமைச்சராக இருக்கிறார்? ஊழல் துரோகத்துக்குச் சமம் என்று சொன்ன நீங்கள், ஒரு தேச துரோகிக்கு இன்னும் எவ்வளவு காலம் உங்கள் ஆதரவை வழங்குவீர்கள்?” என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.