பூமி பாதுகாப்பு இயக்கமான ‘பூமி சுபோஷன் மற்றும் சம்ரக்ஷன்’ என்ற மக்கள் இயக்கம் வருகின்ற ஏப்ரல் 13ல் நாடு முழுவதும் துவக்கப்படுகிறது. வேளாண்மை, சுற்றுச்சூழல் துறையில் தொண்டுபுரியும் 33 அமைப்புகளின் கூட்டு முயற்சியான இந்த பல பரிமாண மக்கள் இயக்கம், நாடு தழுவிய அளவில் மக்களிடம் நிலவளம் காப்பு, மேம்படுத்துதலில் கவனம் செலுத்தும். மேலும், இந்த மக்கள் இயக்கத்தில், ரசாயனமற்ற இயற்கை வேளாண்மை வழிமுறைகள், நிலங்களை சீரமைப்பது, நிலவளம் கூட்டுவது, மக்கும் மக்காத கழிவு பொருட்கள் பிரிப்பு, மக்கும் தன்மையுள்ள கழிவுகளில் இருந்து உரம் தயாரித்தல், விருப்பமுள்ள விவசாயிகளின் வயல்களில் பூமி சுபோஷனைத் தொடங்குவது போன்றவை குறித்த பயிற்சி, விழிப்புணர்வு கருத்தரங்குகள், பிரச்சாரம், பயிற்சிப் பட்டறைகள், விவாதங்கள், விவசாய களப்பணிகள் போன்ற பல்வேறு பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக நவீன விவசாயம், உரம், மக்காத குப்பைகள், ரசாயனங்கள் என்று பல வழிகளில் நாம் நிலத்தினை பாழ்படுத்திவிட்டோம். நம் தாயான பூமியை நாம் சரிவர கவனிக்க தவறிவிட்டோம். பொருளாதாரம் என்ற பெயரில் நம் பூமியில் இருந்து எல்லையற்ற வளங்களை நாம் சுரண்டிக்கொண்டிருக்கிறோம் . ஆனால், அதற்கு திருப்பித்தர மறந்துவிட்டோம். தற்போது நமது புவியில் குறைந்தது 30 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக விவசாயம் உட்பட அனைத்து உற்பத்திகளும் குறைகிறது. நிலத்தின் நீர் தக்க வைக்கும் திறனும், நீர் மட்டமும்கூட வெகுவாக குறைந்து வருகிறது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள நில வளத்தின் விளைவாக, மனிதனுக்கும் விலங்குகளுக்கும் ஊட்டச்சத்து குறைபாடுகள், அது தொடர்பான நோய்கள் ஏற்படுகிறது. இவற்றை தடுக்க, இந்த இயக்கம் தற்போது மிகவும் அவசியமாகிறது.