வெற்றி தரும் நவராத்திரி

மகிஷாசூரனை அளித்து மகிஷாசூரமர்த்தினியாய் வெற்றிவாகை சூடிய அம்பிகையை கொண்டாடுவதற்காகவே புரட்டாசி மாதத்தில் ஒன்பது நாட்கள் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ராமபிரானும் சீதையை மீட்க அன்னையை வேண்டி நவராத்திரி விரதம் அனுஷ்டித்தார் என ராமாயணம் சொல்கிறது.

மதுகைடபர், மகிஷாசூரன், தூம்ரலோசனன், சண்டமுண்டன், சும்பநிசும்பர், ரக்தபீஜன் என பல அசுரர்கள் மூவுலகத்தையும் ஆட்டிப்படைத்தனர். இந்த அரக்கர்களை எப்படியாவது அழித்து, மக்களைக் காக்க முப்பத்து முக்கோடி தேவர்களும் மும்மூர்த்திகளிடம் முறையிட்டனர். மும்மூர்த்திகளும் தங்களின் சக்தியைக் கொண்டு புதிய சக்தியை படைத்தனர். மகேஷ்வரி, கௌமாரி, வராகி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி என பலவகை ரூபங்கள் எடுத்த அன்னை துர்க்கையாக அவதரித்தாள்.

அந்த மகா சக்திக்குத் தங்களது சக்தியையும், ஆயுதங்களையும், வாகனங்களையும் அளித்தனர். மும்மூர்த்திகளின் சக்தியோடும் அவர்களின் ஆயுதங்களுடனும் ஒன்பது பேராக அவதரித்த அன்னை, ஒன்பது நாட்கள் போரிட்டு இறுதியில் மகிஷாசூரனை வீழ்த்தி வெற்றித் திருமகளாக திகழ்ந்தாள். சும்பன், நிசும்பன்களையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள்.

அம்பிகை அவதரித்தபோது தேவர்கள் தங்கள் சக்திகளை ஸ்ரீதேவியிடம் கொடுத்துவிட்டு பொம்மைப்போல நின்றதை குறிப்பிடும் வகையில் கொலு அமைத்து வழிபாடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஆதிசக்தியானவள் இந்த அகிலத்தில் எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறாள். அவளின்றி அணுவும் அசையாது என்பதை உணர்த்துவதே கொலு தத்துவம். அதனால்தான் ஓரறிவு உயிர்கள் முதல் அனைத்துக்கும் ஆதாரமான அம்பிகை வரையிலுமான பொம்மைகள் நவராத்திரி கொலுவில் இடம்பெறும்.

கெட்ட எண்ணங்கள் அரக்கர்கள் போல நம் ஒவ்வொருவர் மனதிலும் தீய எண்ணங்கள் வடிவத்தில் அரக்கர்கள் இருக்கின்றனர். அந்த அரக்கர்களை அழிக்க அம்பிகை இச்சா சக்தியாக தூர்க்கையாக மூன்று நாட்கள் அவதரிக்கிறாள். அவற்றை அழிந்த பின்னர் மூன்று நாட்கள் மகாலட்சுமியாக கிரியா சக்தியாக நமக்கு செல்வங்களை தருகிறாள். கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாக உருவாகி நமக்கு ஞான சக்தியை அளிக்கிறாள் அன்னை. பத்தாம் நாள் தசமியன்று வெற்றி திருமகளாக நமக்கு மோட்சத்தை அடைய வழிகாட்டுகிறாள்.