‘ஏத்திஸ்ட்ரிபப்ளிக்’ என்ற டுவிட்டர் கணக்கில் ஹிந்து மதக் கடவுள்களை அவமதிக்கும் வகையில் தொடர்ச்சியாக பதிவுகள் போடப்பட்டு வந்தது. சமீபத்தில் காளி தேவி பற்றிய அவதூறு கருத்துகளும் அதில் பதிவிடப்பட்டன. அந்தப் பதிவுகளை நீக்கவேண்டும், அந்த டுவிட்டர் கணக்கை முடக்க வேண்டும் என்றும் ஆதித்யா சிங் தேஷ்வால் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ‘பிற மத மக்களின் உணர்வைப் புண்படுத்தும் கணக்குகளை நீக்குவதில் டுவிட்டர் அலட்சியம் காட்டுகிறது. உலகின் ஏனைய பகுதிகளில் வாழும் மக்களின் உணர்வை புண்படுத்தும் பதிவுகள் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்கமாட்டீர்கள். இதே விவகாரம் வேறு மதத்துக்கு நடந்திருந்தால் நீங்கள் நிச்சயம் மிகக் கவனமாக செயல்பட்டு இருப்பீர்கள்’ என டுவிட்டர் நிறுவனத்தை சாடினர். இதற்கு பதில் அளித்த டுவிட்டர் நிறுவனத்தின் வழக்கறிஞர் ‘புகாருக்கு உள்ளான டுவிட்டர் கணக்கின் ஆறு பதிவுகள் நீக்கப்பட்டுவிட்டன. அந்தப் பதிவுகள் தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், நீதிமன்ற உத்தரவு இல்லாமல் ஒருவரின் கணக்கை முடக்க முடியாது’ என்று கூறினார். அதற்கு நீதிபதிகள், ‘அப்படியென்றால் நீங்கள் ஏன் டொனால்ட் ட்ரம்ப்பின் கணக்கை முடக்கினீர்கள்? உங்களுக்கு பிரச்சினையாக தோன்றும் பதிவுகள் மீது மட்டும்தான் நடவடிக்கை எடுப்பீர்களா? என கேட்டு, டுவிட்டரின் கணக்குகளை இடைநிறுத்துவதற்கு அது பின்பற்றும் கொள்கை விவரங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தினர். மேலும், டுவிட்டரில் அணுகலைத் தடுப்பதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை பதிவு செய்யுமாறு மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.