நியூயார்க்கில் உள்ள ஐ.நா சபையின் தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் சிலையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைத்தார். ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் மற்றும் 77வது ஐநா பொதுச் சபையின் தலைவர் சபா கொரோசி மற்றும் பாரதத்தின் நிரந்தர பிரதிநிதி தூதர் ருசிரா காம்போஜ் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காந்தியின் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் விருப்பமான ‘வைஷ்ணவ் ஜன் தோ’ என்ற பஜனையும் வாசிக்கப்பட்டது.மத்திய அரசால் பரிசாக அளிக்கப்பட்ட மகாத்மா காந்தி சிலை, ஐ.நா சபையின் வடக்கு புல்வெளி தோட்டத்தில் நிரந்தரமாக அமைக்கப்படும் காந்தியின் முதல் சிற்பமாக இருக்கும். ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், மகாத்மாவின் சிலையின் படத்தைப் பகிர்ந்துகொண்டு, “மகாத்மா காந்தி அமைதியான சகவாழ்வு, பாகுபாடு இல்லாமை மற்றும் பன்மைத்துவத்திற்காக சமரசம் செய்யாத வக்கீலாக இருந்தார். ஐ.நா தலைமயகத்தில் அமைந்துள்ள இந்த புதிய சிலை காந்தியிங்கொள்கைகளை மதிப்புகளை நினைவூட்டுவதாக இருக்கும்.அதற்கு நாம் உறுதியாக இருக்க வேண்டும்” என தெரிவித்தார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஐ.நா தலைமைச் செயலகத்தில் மகாத்மா காந்தியின் மார்பளவுச் சிலையைக் காண்பது ஒவ்வொரு பாரத தேசத்தவருக்கும் பெருமை அளிக்கிறது. காந்தியின் சிந்தனைகளும், கொள்கைகளும் நமது பூமியை மேலும் முன்னேற்றமடையவும் நீடித்த வளர்ச்சியை அடையவும் செய்யட்டும்” என தெரிவித்தார்.