ஸ்டாலினின் கனவு

தமிழக முதல்வரும் தி.மு.க தலைவருமான ஸ்டலின் ‘அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில்’ இணையுமாறு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், காங்கிரஸ் தலைவர் சோனியா, திருணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, சரத்பவார், ஓவைசி உள்ளிட்ட 37 அரசியல் கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்தில் அவர், சமத்துவம், சுயமரியாதை, சமூகநீதி, பின்தங்கியவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், சிறப்புரிமைகள் என பல விஷயங்களை பற்றி பேசியிருக்கிறார். ஆனால், இது எதுவுமே தி.மு.கவில் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். சமத்துவமும் சமூக நீதியுமற்ற குடும்ப அரசியல், பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு அமர நாற்காலிகூட தராமல் நிற்கவைப்பது, தரையில் அமரவைப்பது, கூட்டணியினருக்கு துரோகம் என பல்லாயிரம் உதாரணங்களை இதற்கு சொல்லமுடியும்.

அடுத்ததாக இக்கடிதத்தில் மாநிலங்களாலான ஒன்றியமாக நாம் இணைந்து நிற்க வேண்டிய நேரம் இது, ஒரு பொதுவான குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும், இந்த கூட்டமைப்புக்கான பிரதிநிதிகளை நியமிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என கோரிக்கை விடுத்துள்ளார். அவர் 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து எழுதப்பட்ட கடிதமாகவே இது தெரிகிறது. பா.ஜ.கவைத் தவிர்த்து ஏனைய கட்சிகளை ஒருங்கிணைத்து, ஒரு தலைமையின் கீழ் தேர்தலை சந்திப்பது, அதனால், தி.மு.கவுக்கு மத்தியில் செல்வாக்கு, பதவி, ஆதாயம் பெறுவது இதன் நோக்கமாக இருக்கலாம். இன்னும் சொல்லப்போனால், வாய்ப்பிருந்தால் பிரதமராகும் கனவும்கூட இதில் அடங்கியிருக்கலாம். யார் கண்டது?

ஆனால், இப்படி ஓரு தலைமையின் கீழ் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்கவும், மூன்றாம் அணியை உருவாக்கவும் தற்போதுவரை காங்கிரஸ் தலைமை, கம்யூனிச தலைமை, மமதா பானர்ஜி, சந்திரசேகர ராவ் உள்ளிட்ட பல தலைவர்கள் முயற்சித்துள்ளனர். ஆனால், அதில் ஒன்றுகூட இன்றுவரை வெற்றி பெறவில்லை. இனியும் சந்தேகமே! ஏனெனில் இவர்கள் அனைவரின் முயற்சிக்கு பின்னாலும் சுயநலம் என்ற ஒன்றே பொதுவாக உள்ளது. தேச நலன், மக்கள் நலன், தேச முன்னேற்றம் என்பதெல்லாம் துளியும் இல்லை.

இதை மக்கள் என்றோ உணர்ந்துவிட்டனர். ஓட்டுக்கு பணம், இலவச வாக்குறுதிகள், பொய் பிரச்சாரங்கள், ஊடக மாயைகள் என பலமுனைத் தாக்குதல்களை மக்கள் மீது இவர்கள் தொடர்ந்து தொடுத்து வந்தாலும், மக்கள் அதனை நம்பத் தயாராக இல்லை. இதனை மக்களின் வாக்குகள் பல தேர்தல்களில் நிரூபித்து உள்ளன. இனியும் நிரூபிக்கும். அவர்களின் வரிசையில் தற்போது ஸ்டாலினும் இணைந்துள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம்…

மதிமுகன்