தி.மு.கவினரின் சொத்துப் பட்டியலை ‘என் மண் என் மக்கள்’ இணையதளத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதில், தி.மு.க தலைவர் ஸ்டாலின், அவரது சகோதரி கனிமொழி, மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகன் சபரீசன், கலாநிதி மாறன் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எ.வ.வேலு, கே.என்.நேரு, பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம் சிகாமணி, ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி வீராசாமி, டி.ஆர். பாலு, ஜெகத்ரட்சகன், துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் உள்ளிட்டோரில் சொத்து பட்டியல் வெளியானது. மேலும் முதல்வர் ஸ்டாலின் மீது ஊழல் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது. இது, தமிழகத்தை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியது. பின்னர், எதிர்பார்த்தபடியே, அண்ணாமலை வெளியிட்ட சொத்து ஆவணங்கள் போலியானவை என்று தி.மு.க சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட சிலர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பினர். இந்நிலையில், தற்போது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது முதல்வர் ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளார். முதல்வரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.